வாஷிங்டன்: ஈரானின் 3 அணு உலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்கா பயன்படுத்திய B-2 stealth bombers போர் விமானம் தொடர்ந்து 37 மணி நேரம் பறந்து இலக்கை தாக்கியுள்ளது. பூமிக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? என விரிவாக பார்க்கலாம். இஸ்ரேல் – ஈரான் இடையே 10வது நாளாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் உள்ள 3 அணு உலைகளை குறிவைத்து சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரானின் ஃபார்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் பகுதிகளில் உள்ள அணு உலைகள் இறையாகியுள்ளன. இதில் ஃபார்டோ அணு உலை டெஹ்ரானின் தென்மேற்கே 100கி.மீ. தொலைவில் உள்ளது. டெஹ்ரானின் தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் நடான்ஸும், 350 கி.மீ. தொலைவில் இஸ்ஃபஹானும் உள்ளன. அதாவது ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சுமார் 400 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்காக B-2 stealth bombers எனப்படும் அதி நவீன ரகசிய போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு B-2 stealth bombers விமானத்தின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,300 கோடி ஆகும். சுமார் 26,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய இந்த விமானங்கள், எந்த ராடாரிலும் சிக்காதவை. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இருந்து 11,400 கி.மீ. தொலைவு பயணித்து ஈரானின் 3 அணு உலைகள் மீது இவை தாக்குதலை நடத்தியுள்ளன. இதற்காக 37 மணி நேரம் இடைவிடாமல் பயணித்த B-2 stealth bombers போர் விமானங்கள் நடுவானிலேயே எரிபொருளை நிரப்பிக்கொண்டன.
B-2 stealth bombers போர் விமானங்கள் மூலம் ஈரானின் ஃபார்டோ அணு உலையை குறிவைத்து வீசப்பட்ட GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகளும் அதி பயங்கரமானவை என்று தெரிய வந்துள்ளது. பூமியை துளைத்து ஊடுருவி தாக்கும் வெடிகுண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் GBU-57 பங்கர் பஸ்டர், Massive Ordnance Penetrator (MOP) என்று குறிப்பிடப்படுகிறது. GBU-57பங்கர் பஸ்டர் குண்டுகள் பூமிக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் உள்ள கட்டுமானங்களையும் குறிவைத்து தகர்க்கும் வலிமை பொருந்தியவையாக, அதற்கு இடையூறாக உள்ள பாறைகள், கான்கிரீட் கட்டுமானங்களையும் அழித்து முன்னேறக் கூடியவை.
13,000 கிலோ எடை கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளில், எரிபொருள் மட்டும் 2,000 கிலோ அளவுக்கு இருக்குமாம். 80 சென்டி மீட்டர் அகலமும், 6 மீட்டர் நீளமும் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாரிக்கப்பவை ஆகும். இவற்றின் முகப்பு பகுதியில் இலக்கை துல்லியமாக குறிவைக்கும் லேசர் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா தாக்குதலின் போது ஃபார்டோ அணு உலை மீது மட்டும் 6 பங்கர் பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மற்ற இரு அணு உலை பகுதிகளிலும் பூமியை துளைத்து சென்று தாக்கும் 30 டோமஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டோமஹாக் ஏவுகணைகள் எந்தவிதமான வானிலையையும் எதிர்கொண்டு நீண்ட தொலைவு கொண்டு தாக்க கூடிய ஏவுகணையாகும். இவற்றை கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து இயக்க முடியும். 5.6 மீட்டர் நீளமும், 1,600 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணைகள், 880 கி.மீ. வேகத்தில் பாயக்கூடியவை என்றும், பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.