ஈரோடு : ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரெங்கராஜ் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த எஸ்.ஐ. சுஜாதாவுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு தீ வைத்தார் அருண் ரெங்கராஜ். கர்நாடகாவில் பணிபுரிந்தபோது உதவி ஆய்வாளராக இருந்த சுஜாதா என்பவருடன் அருண் ரெங்கராஜாக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அருண் ரெங்கராஜின் நடவடிக்கை பிடிக்காமல் அவரது மனைவியும் துணை ஆணையருமான இலக்கியா பிரிந்து சென்றார். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் எஸ்.ஐ. சுஜாதாவுடன் கோபியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார் அருண் ரெங்கராஜ்.
அப்போது சுஜாதாவை தாக்கிய புகாரில் அருண் ரெங்கராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அருண் ரெங்கராஜ், கோபிச்செட்டிப்பாளையத்திலேயே தங்கியுள்ளார்.இந்த நிலையில், இன்று அருண் ரெங்கராஜுக்கும் சுஜாதாவுக்கும் ஏற்பட்ட தகராறில் தனது வீட்டுக்கு தீ வைத்துள்ளார் அருண் ரெங்கராஜ். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, வீட்டுக்கு தீ வைத்துக்கொண்டு உள்ளேயே இருந்த ரங்கராஜை போலீசார் மீட்டுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் காமராஜை அருண் ரெங்கராஜ் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து அருண் ரெங்கராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.