Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஐபிஎல் டி20 இறுதி போட்டி அகமதாபாத்தில் இன்று ஆர்சிபி-பஞ்சாப் பலப்பரீட்சை: முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவது யார்?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று இரவு நடைபெறும் 18-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளில் கோப்பையை கைப்பற்றுவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. 18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ம்தேதி தொடங்கியது. இதில் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து 30-ம்தேதி நடைபெற்ற எலிமினேட்டர்-1 ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணியை, மும்பை அணி வென்று தகுதிச் சுற்று-2 ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று-2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை சாய்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்து வெற்றி கண்டது. இதையடுத்து பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இன்று (ஜூன் 3) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.2014-ல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இதைத்தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் இன்று இறுதிப் போட்டியில் மோதுகிறது.

பேட்டிங்கில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஷ், ஸ்ரேயஸ் அய்யர், நேஹல் வதேரா, சஷாங் சிங், ஸ்டாய்னிஸ் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், ஜேமிசன், ஸ்டாய்னிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சாஹல், விஜய்குமார் வைசாக் ஆகியோர் எதிரணியை மிரட்டி வருகின்றனர். இதுபோல் பெங்களூரு அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதித்துள்ளது. ஏற்கெனவே 2009, 2011, 2016-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றவில்லை. இம்முறையை கோப்பையை வென்றே ஆகவேண்டும் என களம்புகுந்துள்ளது.

பெங்களூரு அணியில் பிலிப் சால்ட், விராட் கோஹ்லி, மயங்க் அகர்வால், கேப்டன் ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் தங்களது உயர்மட்ட பேட்டிங் திறனை வெளிப்படுத்தினால் அந்த அணியின் வெற்றியை தடுக்க முடியாது. பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, க்ருணல் பாண்டியா ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்ககூடியவர்கள்.

ஆர்சிபி-பஞ்சாப் அணிகள் இதுவரை நேருக்கு நேர் 36 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 18 முறை வெற்றிபெற்றுள்ளன. இந்தப் போட்டியில் யார் கோப்பையை வென்றாலும், ஒரு புதிய அணி கோப்பையை வெல்லப் போவது நிச்சயம். சமபலம் வாய்ந்த அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் அகமதாபாத் மைதானம் இன்று அதகளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 6 மணிக்கு நிறைவு விழா

இறுதிபோட்டி துவங்குவதற்கு முன்னதாக மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் பங்கேற்று, இந்திய ராணுவப்படையினரின் புகழைப் பாடவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இடம்பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.