மும்பை: பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025ம் ஆண்டின் 18வது சீசன் ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக வீரர்கள் மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் என தெரிகிறது. ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற விதிமுறைகள் விரைவில் வெளியாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித்சர்மா கடந்த சீசனில் கடைசி நேரத்தில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதனால் வரும் சீசனில் ரோகித்சர்மா மும்பை அணியில் இருந்து விலக உள்ளார். அவர் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை வாங்க கடும் போட்டி இருக்கும். ஏலத்திற்கு முன்பே அவரை வாங்க டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் ரூ.30 கோடியுடன் தயாராக உள்ளன.
இதேபோல் இந்திய டி.20 அணிக்கு கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி ஆசையில் இருக்கிறார். இதனிடையே அவருக்கு கேகேஆர் அணி கேப்டன் பதவி வழங்குவதாக ஆசையை தூண்டி உள்ளது. ஆரம்பத்தில் கேகேஆர் அணிக்காக ஆடிய சூர்யகுமார் யாதவை மீண்டும் தங்கள் அணிக்கு இழுத்து கேப்டன் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. அவர் கேகேஆர் அணிக்கு தாவும் பட்சத்தில் தற்போது கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் அய்யர், வர்த்தக மாற்றத்தில் முதன் முறையாக மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சூர்யகுமாரை மும்பை விடுவிக்க விரும்பாது என்றே தெரிகிறது.
டெல்லி பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்:
கடந்த 7 சீசன்களாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வந்த நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது டெல்லி அணியின் இயக்குனராக கங்குலி உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்க அந்த அணி தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. யுவராஜ் சிங் இதுவரை பயிற்சியாளராக செயல்பட்டது கிடையாது. ஆனால் அடுத்த ஐபிஎல்லில் அவர் பயிற்சியாளர் ரோலில் களம் இறங்க தயாராகி வருகிறார்.