சென்னை : ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நடுவர்கள் அறிவித்த நிலையில், 15வது ஓவரில் இலக்கை எட்டியது.5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதைத்தொடர்ந்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஓய்வை அறிவிக்க இது சரியான தருணமாக இருந்தாலும் இந்த தொடரில் தாம் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி என்ற ஒரு வார்த்தையில் முடித்துவிட முடியாது என்று தெரிவித்தார். மீண்டும் ஒரு 9 மாதங்கள் தனது உடலை தயார் செய்து அடுத்த சீசனில் விளையாடுவது கடினமாக இருந்தாலும் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்து ரசிகர்களின் அன்புக்காக அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவு எடுக்க உள்ளதாக தோனி குறிப்பிட்டார்.