அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் அகமதாபாத்தில் நேற்று மாலை நடந்த போட்டியில் முதலிடத்தில் உள்ள குஜராத்தை 83 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை 4வது வெற்றி மற்றும் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடைசி இடத்துடன் வெளியேறியது. வெற்றிக்கு பின் கேப்டன் டோனி கூறியதாவது: “எனது ஓய்வு குறித்து நான் முடிவெடுப்பதற்கு இன்னும் 4, 5 மாதங்கள் இருக்கின்றன.
இப்போது அதற்கு எந்த அவசரமும் கிடையாது. வீரர்கள் தங்களுடைய செயல் திறன் சரியாக இல்லை என்று ஓய்வுபெற முடிவு செய்தால் 22 வயதிலேயே ஓய்வு பெற வேண்டியதாக இருக்கும். நான் வீட்டிற்கு சென்று சில மாதங்கள் ஆகிவிட்டது. எனவே ராஞ்சி சென்று ஓய்வு எடுக்க வேண்டும். பைக் ரைடு செல்ல வேண்டும். அதே சமயத்தில் நான் கட்டாயம் திரும்பி ஐபிஎல் தொடருக்கு வருவேன் என்றும் சொல்லவில்லை, வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை.
எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று சொல்கிறேன். என்னுடன் பேருந்தில் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் அமர்கிறார். அவர் என்னை விட வயதில் 25 வயது இளையவர். அவருடன் இப்படி சேர்ந்து உட்கார்ந்திருக்கும் பொழுதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்றே தோன்றுகிறது” என்றார்.