ஜெட்டா: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக, 13 வயதே ஆன சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள், திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கித் தவிக்கும் வீரர்களுக்கு வாழ்க்கையை மாற்றியமைக்கும் மாபெரும் வரப்பிரசாதமாக உருவெடுத்துள்ளன.
தமிழகத்தை சேர்ந்த நடராஜன் உள்பட பல புதிய வீரர்களுக்கு இந்த போட்டிகள் களம் அமைத்து தந்து, இந்திய அணியில் இடம்பெறவும் உதவுகின்றன. வரும் 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன், மார்ச் 14ல் துவங்கி மே 25ல் நிறைவடைகிறது. ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம், கடந்த 24, 25ல் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடந்து முடிந்தன. ஏலத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், வெறும் 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளது.
வைபவ், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நகர் அருகே உள்ள மோத்திபூர் கிராமத்தை சேர்ந்தவர். துபாயில் நடக்கும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க வைபவ் சென்றுள்ளார். வைபவின் கிரிக்கெட் கனவை நிறைவேற்ற, அவரது தந்தை சஞ்சீவ், தங்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தை விற்று செலவுகள் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வைபவை ஏலம் எடுத்தது குறித்து, ராஜஸ்தான் அணியின் தலைமை கோச் ராகுல் டிராவிட் நிருபர்களிடம் கூறுகையில், ‘வைபவின் அபார திறமை குறித்து அறிந்திருந்த நாங்கள் அவரை நேரில் அழைத்து பல்வேறு சோதனைகள் நடத்திப் பார்த்தோம்.
அற்புதமான பேட்டிங் திறன் அவரிடம் இருப்பதை அறிந்து, அதை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஏலம் எடுத்தோம்’ என்றார். வைபவின் தந்தை கூறுகையில், ‘வைபவின் திறனை ராஜஸ்தான் அணியினர் நேரில் அழைத்து சோதித்து பார்த்தனர். ஒரு ஓவரில் 17 ரன் எடுத்துக் காட்டும்படி தேர்வாளர்கள் கூறினர். முதல் 3 பந்துகளில் 3 மெகா சிக்சர்களை வைபவ் விளாசினார். இதனால், வைபவை தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்தனர். டெல்லி அணியும் வைபவை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டியது’ என்றார்.