சென்னை: விரைவில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள ஐபோன் 15 மாடல் செல்போன் தயாரிப்பை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கியது. சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் ஐபோன் – 15 மாடல் செல்போன்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் ஐ-போன்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வருகிறது. சீனாவில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் இருந்து ஐபோன் -15 மாடல் செல்போன்கள் வெளியான சில வாரங்களில் சென்னை ஆலையில் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்வதில் பிரச்சளை எழுந்ததை அடுத்து இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு அதன் உற்பத்தியை ஆப்பிள் மாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஐபோன்கள் தயாராகி பல மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
தற்போது பழைய நிலையை மாற்றி சீனாவைவிட எந்த வகையிலும் தாமதம் இல்லாமல் இந்தியாவில் புதிய ஐபோன் – 15 மாடல் செல்போன்களை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய நடவடிக்கையை அடுத்து சீனாவில் உள்ள ஆலைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்தியாவிலும் ஐபோன் -15 தயாராகிறது.