புதுடெல்லி: ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி சட்ட திருத்தம் தொடர்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு அவசரம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஒன்றிய அரசு கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது மக்களவையில், குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மசோதாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதன்படி, இந்திய தண்டனை சட்டம்(ஐபிசி) என்பதற்கு பதிலாக பாரதிய நியாய சம்ஹிதா 2023, குற்றவியல் நடைமுறை சட்டம்(சிஆர்பிசி) என்பதற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம்(ஐஇசி) என்பதற்கு பதிலாக பாரதிய சாக்ஷ்யா 2023 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 3 மசோதாக்களையம் நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த 3 மசோதாக்களும் உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளன. இந்த நிலைக்குழுவில் பாஜவை சேர்ந்த 16 எம்.பி.க்களும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 பேரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு நாளை 3 மசோதாக்கள் தொடர்பான வரைவு அறிக்கைகளை ஏற்று கொள்ளும் என உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைக்குழுவில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய நிலைக்குழு அவசரம் காட்டுவதாக குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பான கூட்டத்தை ஒத்தி வைக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.