சென்னை: முதலீட்டாளர்களிடம் ரூ.25 கோடி மோசடி செய்த தேவநாதனை, மயிலாப்பூர் நிதி நிறுவன அலுவலகத்துக்கு நேரில் அழைத்து வந்து லாக்கர்களை திறந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி மற்றும் 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதலீட்டாளர்களிடம் ரூ.25 கோடி மோசடி செய்த வழக்கில் மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் நிதி நிறுவன இயக்குனர் தேவநாதனை கடந்த 13ம் தேதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக நிதி நிறுவன இயக்குனர்கள் (அவருடைய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள்) குணசீலன், மகிமை நாதன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நிதி நிறுவன கட்டிடம் மற்றும் அதன் கிளை அலுவலக கட்டிடங்கள் என மொத்தம் 8 இடங்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் 5வது நாளாக நேற்று தேவநாதன் உள்பட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்தது. அதில், சீல் வைக்கப்பட்டிருந்த மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன தலைமை அலுவலகத்திற்கு தேவநாதனை போலீசார் நேரில் அழைத்து வந்தனர். சீல் அகற்றப்பட்டு நிதி நிறுவன அலுவலகத்தில் தேவநாதன் முன்னிலையில் லாக்கர்களை திறந்து போலீசார் சோதனை நடத்தினர்.
இதேபோல் பார்க் டவுன், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டையில் உள்ள நிதி நிறுவன கிளை அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. மயிலாப்பூர் நிதி நிறுவன தலைமை அலுவலகத்தில் மட்டும் 3 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி, 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கிளை அலுவலகங்களில் நடந்த சோதனையில் மொத்தம் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தேவநாதன் மீது இதுவரை 200க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.