பெங்களூரு: காங்கிரஸ் கட்சியை விமர்சித்த விவகாரம் தொடர்பாக அமித், அர்னாப் மீதான விசாரணைக்கு தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா மற்றும் தனியார் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகியோர், பஹல்காம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருக்கும் ‘இஸ்தான்புல் காங்கிரஸ் மையம்’ என்ற மாநாட்டு மையத்தை, காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் என்று கூறி அவதூறு கருத்துகளை தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் காந்த் ஸ்வரூப் மற்றும் மற்றொரு நபரால் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக கூறி அமித் மால்வியா மற்றும் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதியப்பட்டது. போலீசாரின் எப்ஐஆரை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி, அமித் மால்வியா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிபதி எஸ்.ராச்சையா பிறப்பித்த உத்தரவில், ‘அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் வரை, போலீசார் தங்களது விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
முன்னதாக அர்னாப் கோஸ்வாமியின் வழக்கறிஞர், ‘இந்தச் செய்தி தவறுதலாக ஒளிப்பரப்பப்பட்டது. பின்னர் திருத்தம் செய்யப்பட்டது. இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என்று கூறினார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20ம் தேதி நடக்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது.