சென்னை: உங்களால் புதிய முதலீடுகளையோ, புதிய தொழிலையோ கொண்டுவர முடியாவிட்டாலும், தமிழ்நாட்டை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற முதலீடுகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16 சிப்காட் பூங்காக்கள் உருவாக்கப்பட்டிருப்பதுடன், புதிதாக 21 சிப்காட் பூங்காக்கள் அமையவிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.68 ஆயிரத்து 773 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடர்ச்சியாக டாபர் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை தொடங்க இருக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஏறத்தாழ 7 மாத இடைவெளியிலேயே இந்தளவுக்கு திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது என்பது தமிழ்நாடு முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக இருப்பதையும், வெளிநாட்டு-வெளிமாநிலங்களின் புகழ்பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டை நாடி வரும் வகையிலான கட்டமைப்பு வசதிகளை திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது என்பதையும் நிரூபித்திருக்கிறது.
அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களுக்குமான பாரபட்சமற்ற வாய்ப்புகளை முதலீடுகள் மூலமாக உருவாக்கி வரும் நிலையில், இதுபற்றி அரசியல் நோக்கத்துடன் கருத்து தெரிவிப்பவர்கள் நிறைய கவனத்துடன் வார்த்தைகளை பயன்படுத்துவதே சரியாக இருக்கும். உங்களால் புதிய முதலீடுகளையோ, புதிய தொழிலையோ கொண்டுவர முடியாவிட்டாலும், தமிழ்நாட்டை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற முதலீடுகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான வீண் அரசியலை தவிர்க்கவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.