*விலை சரிவதால் மீனவர்கள், வியாபாரிகள் கவலை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் புரட்டாசி மாதத்தை தொடர்ந்து மீன், கருவாடு விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் முதல் தொண்டி, ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர், ரோச்மாநகர் வரை 208 கடற்கரை கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார்ந்த தொழில்கள் விறுப்பாக நடந்து வருகிறது.
இத்தொழிலில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு 2,300க்கும் மேற்பட்ட விசை படகுகள், 10,000 க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், வல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி கடலுக்குள் சென்று மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. இங்குள்ள கடல் பகுதி மன்னார் வளைகுடா கடல்பகுதி என அழைக்கப்படுகிறது. இந்த எல்லை து£த்துக்குடி, கன்னியாகுமரி வரை உள்ளது.
இப்பகுதி கடலில் சீலா, இறால், கனவாய் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள் வாளை, குமிளா, காரா, மொரல், நகரை, மத்தி, வாவல்திருக்கை, ஊலா, சூடை, பாறை வகை மீன்கள், மயில்மீன் மற்றும் நண்டு வகைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வகை மீன்கள் அதிகமாக கிடைக்கிறது. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மீன் சாப்பிடுவதை குறைத்து விட்டனர். இதனால் மீன்களின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இது குறித்து மீனவர்கள் கூறும்போது. புரட்டாசி மாதம் என்றாலே மீன் வியாபாரம் மந்தமாக இருக்கும், கடந்த சில வாரங்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தடை ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் மீன் பிடித்து வந்தாலும் கூட, மீன் ஏலம் தொகை குறைந்து விட்டது. இதனை போகிற விலைக்கு விற்பதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றனர்.
சில்லரை வியாபாரிகள் கூறுகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக மீன்களின் விலை சரிந்து வருகிறது.
ரூ. 250க்கு விற்ற குமிளா, விலை மீன்கள். பொட்டு நண்டு, சின்ன பாறை மீன்கள் ரூ.200க்கும், ரூ.350 முதல் 400க்கு விற்கப்பட்ட பொடி நகரை, உருட்டு நகரை ரூ.200, 250க்கும், 500க்கு விற்கப்பட்ட கம்பெனி நண்டு ரூ.350க்கும் கடற்கரை ஏலக் கூடத்தில் விலை போகிறது. ரூ.100 முதல் 200 வரை விற்கப்படும் விலை குறைவான மீன்கள் ரூ.100க்கு கீழே விலை உள்ளது. ஏலம் எடுத்து விற்கும் சிறு வியாபாரிகள் ரூ.10 கூடுதல் விலை வைத்து கூட லாபத்திற்கு விற்க முடியவில்லை. எரிபொருள் செலவு கூட மிஞ்சவில்லை என்கின்றனர். இதனை போன்று கர்நாடக மாநிலம் மங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து விசை படகுகளிலிருந்து பிடித்து வரும் மீன்களை மொத்த வியாபாரிகள் வந்து விற்பனையும் சரிந்துள்ளது.
கருவாடு தேக்கம்
விலை அடிப்படையில் கருவாடு 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இதில் நெய், சீலா கருவாடு கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையிலும், பால் சுறா, கனவாய், மாசி கருவாடு ரூ.500 முதல் ரூ.700 வரையிலும், நெத்திலி, திருக்கை, பண்ணா ஆகியவை ரூ.240 முதல் 350 வரையிலும், காரா, நகரை, பாறை, சின்ன ஊழி, அசலை, கும்லா, சாவாலை, கட்டா, கெளுத்தி, கார்ல், கருவாடு ரூ.80 முதல் ரூ.200 வரையிலும் விற்பனையாகும். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் கருவாடு விலையும் கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.200 வரை குறைந்துள்ளது. உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வாங்குவது குறைந்து விட்டதால், கருவாடு தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கைகொடுக்குமா ஐப்பசி
அடுத்த மாதம் ஐப்பசி மாதத்திற்கு பிறகு கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் ஐயப்பனுக்கு விரதக்காலம் என்பதால் அந்த மாதங்களிலும் மீன், கருவாடு விலை மந்தமாக காணப்படும். புரட்டாசி முதல் தை மாதம் வரையிலான 5 மாதங்கள் தொழில் மந்தமாக இருக்கும் என மீனவர்கள், வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். புரட்டாசியை தொடர்ந்து ஐப்பசி மாதமாவது வியாபாரம் சூடுபிடிக்கும் என்று நம்பிக்கையில் வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் உள்ளனர்.