* அலப்பறை செய்த வழக்கறிஞர்
* வீடியோ வைரலால் பரபரப்பு
சமயபுரம்: திருச்சி அருகே போதையில் தாறுமாறாக கார் ஓட்டியபோது, வழிமறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம் நான் வெள்ளை சட்டை… நீ காக்கி சட்டை… என வழக்கறிஞர் அலப்பறை செய்த வீடியோ காட்சி வைரலால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்க சாவடி அருகே நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் சமயபுரம் ஸ்டேசன் பயிற்சி எஸ்ஐ நித்யானந்தம் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் தாறுமாறாக கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.
இதனை கண்ட போலீசார், காரை வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், திருச்சி தாராநல்லூரை சேர்ந்த தனது பெயர் சக்திவேல் முருகன் என்றும், வழக்கறிஞர் என்றும் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சக்திவேல் முருகனை, மருத்துவ பரிசோதனைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சோதனையில் அவர் மது அருந்தியதை மருத்துவர் உறுதி செய்தார்.
பின்னர் சக்திவேல் முருகனை சமயபுரம் காவல்நிலையம் வருமாறு பயிற்சி எஸ்ஐ நித்தியானந்தம் அழைத்தபோது, அவரிடம் “நான் வெள்ளை சட்டை நீ காக்கி சட்டை வா ஒன்றிக்கு ஒன்றி மோதி பார்க்கலாமா?. நாளைக்கு காலை உன் சட்டையை கழட்டுலனா பாரு’’ என போதையில் ஏகபோக வசனங்கள் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை காவலர் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டு இருக்க, சக்திவேல் முருகன் மீண்டும் மீண்டும் சப்-இன்ஸ்பெக்டரை சட்டையை கழட்டுகிறேன் என பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். ஒரு வழக்கறிஞர் குடிபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.