பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர்(53). வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். பணி நேரத்தில் மது போதையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததன்பேரில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு, பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மீண்டும் பணி மாறுதலாகி வந்தார். தினமும் குடிபோதையில் பணிக்கு வருவதாகவும், அலுவலகத்திலேயே அமர்ந்து மது அருந்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், இவரது குடிப்பழக்கத்தை பயன்படுத்தி, ஒப்பந்ததாரர்கள் காசோலை பெறுவதற்கு மதுவை வாங்கி கொடுத்து காரியம் சாதித்து வருவதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் ஒருவர், பி.டி.ஓ. சங்கருக்கு வழக்கம்போல் மது வாங்கி கொடுத்துள்ளார். அலுவலகத்தில், தனது இருக்கையில் கையில் மது பாட்டிலுடன் பி.டி.ஓ. சங்கர் இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி விசாரனை நடத்தி, பி.டி.ஓ. சங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.