Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூண்டோடு இணைய சொல்லி மிரட்டல் எதிராலி நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியில்லை? பாஜவுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க முடிவு

சென்னை: பாஜவில் கூண்டோடு சேரச் சொல்லி மிரட்டியதால், நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போட்டியிடாமல், பாஜவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பாஜவை நம்பி அதிமுகவை உடைத்தார் பன்னீர்செல்வம். ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சி செய்தார். ஆனால் சசிகலாவும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து கட்சியை கைப்பற்றினர். ஆட்சியிலும் அமர்ந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டதும், எடப்பாடியையும், பன்னீர்செல்வத்தையும், அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவே சேர்த்து வைத்தார்.

இப்போது எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டது. அதில் எடப்பாடிக்கு ஆதரவு அதிகமாக இருந்ததால், பன்னீர்செல்வத்தை வழியிலேயே விட்டு விட்டு அணியை மாற்றிக் கொண்டார். இப்போது எடப்பாடி, பாஜவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விட்டார். இதனால் காத்திருந்த பன்னீர்செல்வம், நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், அவரது ஆதரவை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் பெரிய அளவில் வரவேற்கவில்லை. தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் பாஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கூட பங்கேற்றார்கள்.

பாஜவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு மோடி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு இல்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜ டெல்லி நிர்வாகிகள் மற்றும் தமிழக நிர்வாகிகள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாமரை சின்னத்தில் தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவி அணியினர் போட்டியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இதை ஓ.பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. ஆனாலும், கூட்டணி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வமும், ‘தமிழகத்தில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், அவரது பேச்சுக்கு எடப்பாடி அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம், பாஜவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட ஓபிஎஸ் விரும்பவில்லை. கட்சியை பாஜவில் இணைக்கும்படி கூறியதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், பாஜவுக்கு ஆதரவு மட்டும் தெரிவித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்ற நிலையை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறும்போது, ”இரட்டை இலை சின்னத்தை பெற நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் தொடர்ந்து நாடி வருகிறார். இந்த நிலையில் தாமரை சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டாலோ, பாஜவில் இணைந்தாலோ, எங்களுக்கு இரட்டை இலை சின்னம் இனி எப்போதுமே கிடைக்க வாய்ப்பு இருக்காது. அதனால்தான், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், பாஜவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்’’ என்று கூறினர்.