தேனி: அந்தரங்கப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் வரை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (34). புளி மொத்த வியாபாரி. இவர் தனது ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதை ராஜமாணிக்கம் செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். இளம்பெண் சென்னைக்கு வேலைக்கு சென்ற பின்னரும், ராஜமாணிக்கம் அடிக்கடி சென்னை சென்று சந்தித்துள்ளார்.
அப்போது ஒரு நாள் இளம்பெண் குளிக்கச் சென்ற நேரத்தில், அவரது செல்போனை பார்த்துள்ளார். அதில், இளம்பெண்ணும் வேறு ஒரு நபரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இருந்ததைக் கண்டுள்ளார். அந்த படங்களையும் ராஜமாணிக்கம் தனது செல்போனிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் சென்னையில் இருந்து மாறுதலாகி பெங்களூருவில் பணி புரிந்து வருகிறார். அப்போது ராஜமாணிக்கம், இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது அந்தரங்க படங்களை அனுப்பியுள்ளார்.
பின்னர், அவரை தொடர்பு கொண்டு, அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு பயந்து போன அந்த இளம்பெண், பல தவணைகளாக ரூ.40 லட்சம் வரை கொடுத்துள்ளார். ராஜமாணிக்கம் மேலும், பணம் கேட்டு மிரட்டவே, இதுகுறித்து இளம்பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தாயார் அளித்த புகாரின்பேரில், தேனி போலீசார் வழக்குப்பதிந்து ராஜமாணிக்கத்தை நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.