*145 பேர் பங்கேற்றனர்
ஈரோடு, ஜூன் 10: ‘ஈரோட்டில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்காக நடந்த நேர்காணலில் 145 பேர் பங்கேற்றனர்.ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடம் 139 என்ற எண்ணிக்கையில் காலியாக உள்ளது.
இப்பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், அந்தந்த ஒன்றிய அளவிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் துறை மூலமும் சேகரிக்கப்பட்டது. இதில், 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றதில், 2,575 விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டது. தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 26ம் தேதி முதல் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடந்தது. இதில், ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு ஒன்றிய பகுதிக்கான நேர்காணல் ஈரோடு காமராஜர் வீதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.
இந்த கலந்தாய்வில் ஏராளமான பட்டதாரி பெண்கள், முதுகலை பட்டதாரி பெண்கள், பொறியியல் படித்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர். சில பெண்கள் அவர்களது குழந்தைகள் மற்றும் கணவர், குடும்பத்தினருடன் வந்து நேர்காணலில் பங்கேற்றனர். ஒரு கர்ப்பிணி பெண்ணும் நேர்காணலில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில், மாவட்ட அளவில், 2,575 தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். கல்வி தகுதி, அவர்கள் வசிக்கும் பகுதி மற்றும் அங்கன்வாடி உள்ள இடத்துக்குமான தூரம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டது.
அவர்களது கல்வி, சாதி உள்ளிட்டவைகளுக்கான சான்றுகள் சரி பார்க்கப்பட்டு, நேர்காணலும் நடந்தது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கான நேர்காணல் நடத்தப்பட்டு நேற்று இறுதியாக ஈரோடு ஒன்றியம் மற்றும் மாநகராட்சி பகுதிக்கான நேர்காணல் நடந்தது. இதில், 145 பேர் அழைக்கப்பட்டனர். இன்னும் மதியம் 1 மணி வரை நேர்காணல் நடக்க உள்ளது. நேர்காணல் முடிவு குறித்து அரசு அறிவிக்கும், என்றார்.