இடைப்பாடி: போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இச்செயலில் ஈடுபட்ட லாரி கிளீனரை 12 மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி பஸ் நிலையம் அருகே போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இந்த போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 4.10 மணியளவில், டூவீலரில் வந்த மர்மநபர் திடீரென பெட்ரோல் குண்டை வீசினார். அந்த பெட்ரோல் குண்டுகள், ஸ்டேஷன் காம்பவுண்ட் முன்பகுதியில் வந்து விழுந்தது.
ஆனால் வெடித்து தீ பிடிக்கவில்லை. அப்போது ஸ்டேஷனுக்குள் இருந்து வெளியே ஓடி வந்த போலீசார், பெட்ரோல் குண்டு சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வெளியில் பைக்கில் மின்னல் வேகத்தில் ஒருவர் தப்பிச் சென்றார். தகவலறிந்து எஸ்பி அருண்கபிலன் வந்து நேரடி விசாரணை நடத்தினார். அதில், 2 பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி, திரியில் தீயை பற்ற வைத்து மர்மநபர் வீசியுள்ளார். ஆனால், விழுந்த வேகத்தில் தீ அணைந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது தெரியவந்தது.
பாட்டிலில் இருந்த திரி கருகியிருந்தது. பெட்ரோல் குண்டுகள் வீசிய நபரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் வரிசையாக சில இடங்களில் சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. விசாரணையில், இடைப்பாடி ஏரி ரோடு பகுதியை சேர்ந்த ஆதித்யா (20) எனத்தெரியவந்தது. அவரை தனிப்படை போலீசார் நேற்று மாலை மடக்கி கைது செய்தனர். அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
வாலிபர் ஆதித்யா, லாரி கிளீனர் வேலைக்கு சென்று வருகிறார். தன்னை ஒரு பெரிய ரவுடியாக காட்டிக்கொள்ள இருப்பதாக தன்னுடன் சுற்றித்திரியும் நபர்களிடம் தெரிவித்துள்ளார். வீட்டிலும் தந்தை பிரபுவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். ஒருநாள் தந்தை பிரபுவை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போவேன் என தாயிடம் தெரிவித்துள்ளார். எப்படியாவது பெரிய ரவுடியாக வலம் வர வேண்டும் என்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்குள் பெட்ரோல் குண்டை தூக்கி வீசினேன் என அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டேஷன் சென்ட்ரி பணியில் இருந்த போலீஸ்காரர் ராமச்சந்திரன் புகாரின் பேரில் வழக்குப்பதிந்து ஆதித்யாவை கைது செய்துள்ளனர். அவரை சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட 12 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி அருண்கபிலன் பாராட்டினார்.