சென்னை: விசாரணைக் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்; காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது. காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வந்தால் உடனடியாக எஃப்.ஐ.ஆர்., சி.எஸ்.ஆர். கொடுக்க வேண்டும்.
காவல்துறையில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கோயில் திருவிழாக்களில் ஜாதி ரீதியிலான பாகுபாடு, மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காவலர்கள் சகிப்புத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும். விசாரணைக் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது. தேவையில்லாத துன்புறுத்தல்கள், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முழுமையான Recovery என்ற பெயரில் விசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது. விசாரணையின்போது பொறுப்பு அதிகாரி இல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த காவலரும் விசாரிக்க கூடாது. ஒரே நபரை 3, 4 நபர்கள் ஒன்றாக சேர்ந்து விசாரிக்கக் கூடாது. வாகன தணிக்கையின்போது தேவையில்லாத செயல்களில் ஈடுபடக் கூடாது. குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் தொல்லை தரக் கூடாது என்று கூறினார்.