நன்றி குங்குமம் டாக்டர்
மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்
வலைமொழி என்பது சமூக வலைதளங்களில் வளைந்து நெளிந்து ஓடும் பாம்பைப் போல் இருக்கிறது. சில சமயம் சிலவற்றைச் சிறப்பாகக் கடத்தும் வழியாக இருக்கிறது. எந்தச் செய்தி வைரல் ஆகுமோ, எது அதிக விருப்பக்குறியீடுகள் பெறுமோ என்று கணிக்கவே முடியாத அளவிற்குப் புதிர் ஓட்டமாகியுள்ளது. பெண்களின் சிறு அசைவுகள், அழகியல் நடை உடையோடு கூடிய புகைப்படங்கள், காணொளிகள், வதந்திகள், தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்குவது போன்றவை அதிகம் கிடைக்கின்றன. எனவே, ‘வளை’(யல்)மொழி என்றுக்கூட சொல்லிக் கொள்ளலாம். அது அடுத்தவருக்கு வலிதரும் மொழியாகவும் மாறி விடுவதுதான் பிரச்னை.
அன்றாட வாழ்க்கையில் ஒரு நடுத்தர வயது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 கமெண்டுகள் சோசியல் மீடியா பதிவுகள் மூலம் பார்க்கிறான் என்கிறது புள்ளிவிவரம். இதில் 65% முகம் தெரியாத மனிதர்களின் பதிவுகள்தாம். இவ்வாறு காணக்கிடைக்கும் ஒரு பதிவு/ காணொளி அல்லது செய்திக்கு கீழே பலரும் பின்னூட்டங்கள் இடுகிறார்கள்.சிலர் பொருத்தமற்றவற்றை அங்கே பதிவு செய்கிறார்கள்.
பொருத்தமற்றவை என்பதை விடவும் தரக்குறைவாகவும், ஆபாச மொழிகளாக தனிமனித வக்கிரங்களை வெளிப்படுத்துபவர்களாகவும் சிலர் இருக்கிறார்கள். அதுவும் அந்த பதிவானது ஒரு பிரபலத்தைக் (Celebrity ) குறித்து என்றால் கேட்கவே தேவையில்லை. தலைக்குமேல் வைத்துக்கொண்டாடி அவருக்கு சிலர் இணையத்திலே கோவில் கட்டி பாலபிஷேகம் கூட செய்கிறார்கள்.மேலும், கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது பலரின் வழக்கம். அது அதீதப் பிரபலத் தொழுகைக் கோளாறு (Celebrity Worship Syndrome ) என்ற தீவிர மனச்சிக்கலைக் கொண்டு வரும்.
இதற்கு மாறாக, வேறு சிலர் எதுவானாலும் எதிர்த்துக் கேள்வி கேட்பது, மறுப்பது, கேலி செய்வது என்று பின்னூட்டம் இடுகிறார்கள். ‘வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை’ என்ற கணக்காக இப்படி இரண்டில் ஒரு பக்கமாக விளம்பு நிலையில் நின்றுதான் தொங்குவோம் என்கிறார்கள். தங்கள் வலைமொழியை பட்டை தீட்டியபடி விடிய விடிய கருவிக் கொண்டே காத்திருக்கிறார்கள் பின்னூட்டவாதிகள் எனப்படும் வலைபயனாளிகள். Followers, Promoters, Trend setters, Twist makers, Triggering Nettizens என்று இவர்களுக்கு அனுதினமும் புதுப் பெயர்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பலரும் ஒரே விதமான கமெண்ட்டுகளையே தொடர்ந்து கொடுப்பது எரிச்சலூட்டும் வகையில் இருப்பதையும் காண்கிறோம். அதாவது, ‘‘நாட்டிற்கு ரொம்ப முக்கியம்”, ‘‘இப்போ இது தேவையா ” ‘‘ரொம்ப முக்கியம்” ‘‘நீங்க அதை பார்த்தீங்களா” ‘‘கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றான் பாருங்க” இப்படியான பொதுவான நகைச்சுவைத் தொடர்கள் மீண்டும் மீண்டும் கண்ணில் படுகின்றன. மீம்ஸ்கள் பரவலாகிவிட்ட காலமிது. அதிலும் ஒரே விதமான கேலிச் சித்திரங்கள் எல்லா இடத்திலும் பகிரப்படுகின்றன.
சிலர் தங்களுக்குத் தொடர்பில்லாத, தங்களின் துறை அல்லாத ஒரு பதிவின் கீழ் பின்னூட்டத்தைக் கொடுப்பார்கள்.அவர்களுடைய சுயவிளம்பரத்தை, ஜோதிடம் பார்க்கப்படும் என்றோ வேறு இணைப்பு சுட்டிகளையோ பகிர்வார்கள்.அந்தக் காலத்தில் இந்த கடிதத்தை 100 பிரதி எடுத்து அனுப்பினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதுபோன்ற மொட்டை கடிதாசிகள் வரும். அதேபோல தொடர்பில்லாமல் உங்களின் படம் வரைய அணுகவும், உடல் மசாஜ் செய்ய அழைக்கவும் போன்றெல்லாம் பின்னூட்டம் இடும் சிலர் இருக்கிறார்கள். வேறு சிலரோ தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல் அங்கே ஒரு விவாதத்தை ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் அதை முழுமையாகச் சொல்லத் தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் பொருளை விட்டு விலகிவிட்டு, விவாதம் சூடாக மற்றவர்கள் கேள்வி கேட்கும் பொழுது சொல்லாமல் ஓடி விடுகிறார்கள்.ஒரு படி மேலே போய் வேறு சிலர் தன்னுடைய அடையாளத்தை அங்கே நிலை நாட்டுவது, தன்னை அறிவாளி போல் காட்டிக் கொள்வது என்பதற்காகவும் பின்னூட்டங்களை வாரி வழங்குகிறார்கள்.
இவ்வாறு பலதரப்பட்ட பின்னூட்ட வகையினரின் தொடர்புமொழிச் சிக்கல்களை (Social media Communication Barriers ) உளவியல் ரீதியாக நெருங்கி பார்க்கும் பொழுது காரணங்களை அறியலாம். முதலாவது, Identity Crisis எனப்படும் தன்னைப் பற்றிய குழப்பம் கொண்டவர்கள் – அதாவது தான் யார் என்பதை முழுமையாக அறியாதவர்கள் தனக்கானவற்றை வாழ்வில் செய்ய முடியாதவர்கள். இவர்கள் இது போன்ற பின்னூட்டங்களில் வந்து எதிர்மறையான விமர்சனங்களையும், தரக்குறைவான சொற்களையும் உதிர்க்கிறார்கள். ‘‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” என்பது போல கசக்கும் காய் போன்ற தீய மொழிகளை வீசுகிறார்கள்.
அதுவும் நடிகைகள்/பெண்கள் என்றால் இன்னும் ஆபாசமாக பேசுவது மிகவும் இயல்பாக இருக்கிறது. அடுத்ததாக பொறாமை உணர்வு அதிகமாக இருப்பவர்கள் பிரபலங்களின் பின்னூட்டங்களில் வந்து வசை பாடுவர்.‘உங்களைப் பார்த்து ஒருவர் பொறாமைப்படுகிறார் என்றால், நீங்கள் சரியான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று உளவியலும், தத்துவயியலும் கூறுகிறது.
சமூக வலைதளங்களில் பொதுவான பொறாமையை பலவாறு வெளிப்படுத்துவதைக் காணலாம்.‘‘உன் குடும்பத்தில் எப்படி” என்று பிரபலங்களின் குடும்பத்தை பற்றி விமர்சிப்பது, அவதூறு பரப்புவது என்பது ஒருவகை.வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் பிரபலங்களை அப்படியே காப்பி அடிக்கும் செயல்கூட பொறாமையின் உந்துதலே என்கிறது உளவியல் கோட்பாடு. சிலர் பின்விளைவுகள் (Consequences ) குறித்து எந்தவொரு பொறுப்புணர்வும் (Responsibility) இல்லாமல், ‘எப்படி இவர்களுக்கெல்லாம் இவ்வளவு நேரம் இருக்கிறதோ” என்று நாம் யோசிக்கக்கூடிய அளவிற்கு வக்கிரமான (Perverted ) மனநிலையோடு பின்னூட்டங்களைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள்.
சமீபத்தில், இணையத்தில் ‘‘ஒரு பெண் 50 ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார்” என்ற ஒரு செய்தி பரவலாக வைக்கப்பட்டது. விவாதத்திற்குரிய சமூக சிக்கலான செய்தி அது. அந்த செய்தியின் கீழே நகைச்சுவை என்ற நினைப்போடு ஒருவர்” 51-வது ஆளாக நான் வருகிறேனே மேடம் ” என்று கேட்கிறார். இப்படியாக, பாலியல் விழைவுகளை, காம விகாரங்களை எல்லாம் வெளிப்படுத்துவதற்கு ஒரு வடிகாலாக சமூகவலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். Fake Id யாக, தங்களுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டும் இதைச்செய்கிறார்கள். உளவியல் தொடர்ந்து வலியுறுத்துவது போலவே மனிதன் எதிர்மறை ஈர்ப்பு காரணமாக, ஆக்கப்பூர்வமானவற்றை ஆதரிப்பது, பகிர்வது இவற்றில் கவனம் செலுத்துவதில்லை.நேர்மறையான பதிவுகளைப் பாராட்டத் தயங்குவதே இயல்பாகிவிட்டது.
மறைந்த எழுத்தாளுமை சுஜாதா அவர்கள் கைக்குள்ளே உலகம் வந்துவிடும் என்று பலகாலம் முன்பே சொன்னார். ஆனால் இன்று கைக்குள் வந்து விட்டாலும் தொடர்பு மொழியை எவ்வாறு கையாளுவது என்ற தெளிவில்லை. எனவே, உலகில் எல்லோரும் இன்னும் விலகி மனதளவில் பிளவுபட்டே இருக்கிறார்கள். ஒரு நடிகை முகத்திற்கு மேக்கப் போடும் காணொளியில் வந்து ஒருவர் ‘‘உன் தொழில் என்ன” என்று கேட்கிறார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் சூழலில்தான் இருக்கிறோம் நாம்.
இதில்,வார்த்தைகளாலும், உணர்வுரீதியாகவும் (Verbal -Emotional Abuse) முறைகேடாக நடத்துவது எவ்வளவு தவறானது ? இதன் பின்னணியில் தன் வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்காதுபோன காரணத்தால் வெளியே இவ்வாறு ஆளுமை செலுத்த விரும்பும் உளவியல் திரிபு இருக்கக்கூடும். அவரவர் கோபங்களைக் காட்ட வேண்டிய இடத்தில் காட்டாமல் இருக்கும் அழுத்தமானது, பொதுவெளியில் கண்ணுக்குத் தெரியாத எவனோ ஒருவன் கிடைக்கும்பொழுது, அங்கே எதிர்வினையாகக் கொட்டப்படுகிறது. இந்தச் சொற்கள் என்ன செய்யும்? சொற்களின் முக்கியத்துவம் என்ன என்று கட்டாயம் நாம் அனைவரும் அறிவது அவசியம்.
குப்புசாமியின் கதை இப்படித்தான். நம் நண்பர் குப்புசாமி மிகவும் பக்தி உள்ளவர். குப்புசாமி கடும் தவம் புரிந்தாராம்.இறைவனும் மனமிறங்கி அவன் முன் பிரசன்னமாகி ‘‘பக்தா ! உன் பக்தியை மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்? என்றாரம். ‘‘ இறைவா எனக்கு சாவே வரக்கூடாது” என்று கேட்டனாம். ‘அவ்வாறே தந்தேன்’ என்று கூறி இறைவன் மறைநது விட்டார். அதற்குப் பிறகு, சாலையில் அவன் நடந்து சென்ற போது வெகு நாட்களுக்கு முன் சந்தித்த ஒரு பழைய நண்பரைக் காண நேர்ந்தது. அந்த நண்பர் குப்புசாமியையே தொலைவில் இருந்து உற்றுப் பார்த்து, ‘‘உன்னை எங்கோ பார்த்து இருக்கிறேன்.
உன் பெயர் என்ன?” என்று கேட்டாராம்.நம் குப்புசாமி தன் வாயைத் திறந்து தன் பெயரைச் சொன்னான். ‘‘குப்புமி” ‘‘குப்புமி” ‘‘குப்புமி” ‘‘என்ன குப்புமியா அவன் இறைவனிடம் எனக்கு சாவே வரக்கூடாது என்று கேட்டான். ஆகவே,”சா’ என்ற தமிழ் எழுத்து அவன் வாயில் வரவில்லை.அதன்பின் அவ்வூரில் கேலிப்பொருளாகி விட்டான். நகைச்சுவைக்காகச் சொல்லப்படும் இக்கதையின் வழியாக நாம் பலவற்றை உணரலாம். இப்படித்தான் நம்மில் பலருக்கு, குப்புசாமியைப் போல் வரமாகக் கிடைத்த இணைய சுதந்திரத்தை, தொடர்பு மொழியைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை.
ஒரு சொல்லின் பிறழ்வு காரணமாக வாழ்க்கையே கேலிப்பொருளாகி விடும் அபாயம் இருக்கிறது என்று உணரவேண்டும்.சிறு கோழிச் சண்டையால் பிரிந்த குடும்பத்தைப் பார்த்தவர்கள் நாம். ஒரு சொல்லால் பிரிந்த குடும்பங்கள் உண்டு. இணைந்த மனங்களும் உண்டு என்றும் அறிவோம். எனவே, சொற்களைத் தரமாக யோசித்துப் பயனுள்ளவையாகவும், பொருள் பதிந்தவையாகவும் பயன்படுத்துவது வேண்டும். நம் வாழ்வுக்கும், பிறர் வாழ்வுக்கும் ஏதேனும் நலன் பயக்கக் கூடியவையாக சொற்கள் இருக்க வேண்டும்.