சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): இன்று எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): உண்மையாகவே மகளிருக்கு முழுமையான விடுதலையையும், உரிமையையும் வென்றெடுத்துக் கொடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மகளிர் விடுதலையை வென்றெடுக்க களத்தில் நிற்கும் அன்புச் சகோதரிகளுக்கு உலக மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): மகளிருக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் நல்ல சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த இனிய நாளில் எனது நெஞ்சார்ந்த உலக மகளிர் தின நல்வாழ்த்துகளை அனைத்து மகளிருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புமணி (பாமக தலைவர்): ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: ஆண்களுக்கு, பெண்கள் அடிமையில்லை, பெண்களுக்கு, ஆண்கள் அடிமையில்லை. இருபாலரும் ஒருசேர நட்புணர்வோடு புரிதல்கள் இருக்க வேண்டும் என்பதே முன்னோர்கள் காட்டிய வழியாகும். ஆண், பெண் உறவு நட்பின் அடிப்படையில் அமைகிறபொழுது, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை இன்றைய காலகட்டத்தில் இருபாலரும் ஒரு சேர சமாளிக்க வேண்டியுள்ளது. தேமுதிக சார்பாக இதுவரைக்கும் பல திட்டங்களை பெண்களுக்காக கழகத்தின் மூலமாக செய்யப்பட்டுள்ளது. பெண்களை கவுரவப்படுத்தும் வகையில் என்றைக்கும் தேமுதிக இருக்கும். பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை பெண்களை இழிவாக நடத்துவது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தடுத்து பெண் இனத்தைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
விஜய் வசந்த் (கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி): தற்போது பெண்கள் குடும்ப தலைவிகளாக மட்டுமின்றி இன்று எந்த ஒரு துறையிலும் சாதித்து வருகின்றனர். இது தொடர வேண்டும். ஆண் பெண் சமத்துவம் காக்கப்பட வேண்டும். பெண்களின் பெருமையை நாம் பேசும் பொழுதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிக பெரிய நிர்பந்தம் நமது சமூகத்திற்கு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் லட்சியம் நம் அனைவருக்கும் வேண்டும்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து
0