சென்னை: அபுதாபியில் இருந்து சென்னைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான 2.30 கிலோ தங்கத்தை கடத்தி வந்த சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இளைஞரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது, சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஒருவர், அபுதாபியில் இருந்து மும்பை வரும் விமானத்தில் சுமார் ரூ.1.90 கோடி மதிப்புடைய 2.30 கிலோ தங்கத்தை கடத்திக் கொண்டு வந்தார். அவர் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த 10ம் தேதி காலை மும்பை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியது. இந்த சர்வதேச தங்கம் கடத்தல் பயணி, தான் கடத்தி வந்த தங்கத்தை வெளியில் எடுத்து வராமல், தனது இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, அவர் மட்டும் விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இதை தொடர்ந்து, தங்கம் கடத்திய பயணி மும்பையில் இருந்து மற்றொரு உள்நாட்டு விமானம் மூலம் சென்னைக்கு கடந்த 11ம் தேதி வந்தார். பின்னர், தான் தங்கத்தை மறைத்து வைத்திருந்த விமானம் எங்கெல்லாம் செல்கிறது என்பதை ரகசியமாக சிலரது உதவியுடன் கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த 14ம் தேதி மாலை கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வர இருக்கும் தகவல், தங்கம் கடத்தும் பயணிக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த பயணி, கடந்த 13ம் தேதி சென்னையில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் கொல்கத்தா சென்றார். அதோடு அவர் 14ம் தேதி கொல்கத்தாவில் இருந்து, சென்னைக்கு வர இருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் தான் சீட்டுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்த விமானத்தில், அதே சீட்டில், தனக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டார். மேலும், தங்கம் மறைத்து வைத்திருந்த அதே இருக்கையில் பயணித்து சென்னை வந்தார். இதனிடையே, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், சர்வதேச தங்கம் கடத்தும் பயணியான, சென்னை இளைஞரை ரகசியமாக கண்காணித்தனர்.
சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்து நின்றதும், கடத்தல் பயணி தான் ஏற்கனவே சீட்டுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 2.30 கிலோ தங்கத்தை எடுத்து, தனது கைப்பையில் மறைத்து வைத்துக் கொண்டு, வெளியில் வந்து கொண்டு இருந்தார். உள்நாட்டு விமான நிலையத்தில் தயாராக நின்ற சுங்க அதிகாரிகள் கடத்தல் பயணியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கடத்திக் கொண்டு வந்த ரூ.1.90 கோடி மதிப்புடைய, தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை சென்னை விமான நிலைய சுங்க அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சென்னை இளைஞர் கையும், களவுமாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.