சென்னை: சென்னையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் பெண்களுக்கு ரூ.3200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில், மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்ட மகளிர் பயனாளிகளுக்கு 250 ஆட்டோக்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டைகள், வங்கி கடன் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், நன்னிலம் நில உடைமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு நிலப் பத்திரங்கள், நிலம் வாங்குவதற்கான மானியம் மற்றும் வெளிநாடு சென்று பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு வீடுகள் பெறுவதற்கும், வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் ஆணைகள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள், 2025ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது, பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது மற்றும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் என பெண்களுக்கு ரூ.3,200 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். அதன்படி, பெண் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நன்னிலம் நில உடைமை திட்டத்தின் கீழ், 5 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலப் பத்திரமும், நிலம் வாங்குவதற்கான மானியமாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வெளிநாடு சென்று பட்டமேற்படிப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக 3.50 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார். தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் கீழ், பதிவு செய்துள்ள 40 பெண் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் பெறுவதற்கான உதவித்தொகை ஆணைகளும், 10 பெண் தொழிலாளர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையின் உதவியுடன் வீடுகள் கட்டிக் கொள்வதற்கான ஆணைகள் என மொத்தம் 50 பெண்களுக்கு ரூ.1.18 கோடி நிதி உதவிகளையும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற முத்துரத்தினஸ்ரீ, ஜே.நிரஞ்சனா, எஸ்.வர்ஷினி ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 2,100 பெண் காவல் புலன் விசாரணை அலுவலர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்திலும், 23,805 பெண் காவல் ஆளிநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 15 பணியிடை பயிற்சி மையங்கள் மற்றும் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 7 காவல் பயிற்சி பள்ளிகளிலும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் காவல்துறை இயக்குநர் (பயிற்சி) தலைமையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.