Saturday, February 24, 2024
Home » சர்வதேச கவனம் ஈர்க்கும் குமரி ரப்பர்!

சர்வதேச கவனம் ஈர்க்கும் குமரி ரப்பர்!

by Porselvi
Published: Last Updated on

கேரளத்தைப் போலவே தோற்றம் கொண்டிருக்கும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம், கேரளத்தில் விளையும் பல பயிர்களை உற்பத்தி செய்துவருகிறது. அவற்றில் முக்கியமானவை ரப்பர் மரங்கள். இது இந்த மாவட்டத்தின் பணப்பயிராகவே விளங்கிவருகிறது. தென்னை மரங்களுக்கு அடுத்தபடியாக ரப்பர் மரங்கள் இந்த மாவட்டத்தில் நிறைந்திருக்கின்றன. கன்னியாகுமரியில் மட்டும் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் விவசாயம் நடந்துவருகிறது. இந்தப் பகுதியில் நிலவும் குளிர்ச்சியான சூழல் ரப்பர் விவசாயிகளுக்கு கைகொடுப்பதால், ரப்பர் மரத்தில் பால் வடிக்கும் தொழில் சிறப்பாகவே நடந்து வருகிறது. இந்தத் தொழிலை நம்பி குமரிமாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அரசு நிர்வகித்து வரும் ரப்பர் தோட்டங்களில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ரப்பர் விவசாயத்தில் பல குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் ரப்பர் தொழிலை பாரம்பரியமாக செய்து வரும், கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அடுத்த கூட்டமாவு பகுதியைச் சேர்ந்த அலோசியஸ் அம்புறோஸ் என்பவரைச் சந்தித்தோம். “எங்கள் ஊரில் அனைவருக்கும் தெரிந்த ஒரு தொழில் என்றால் அது ரப்பர் சாகுபடிதான். இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகத் தரத்தில் இருப்பதால் குமரி ரப்பருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நானும்கூட ரப்பர் தோட்டம் வைத்து ரப்பர் ஷீட்கள் தயாரித்து விற்பனை செய்கிறேன். எனது அப்பா காலத்தில் இருந்தே எங்களுக்கு இதுதான் தொழில். எங்கள் பகுதியில் ரப்பரைப் போலவே வாழை, நெல், காய்கறி போன்ற பயிர்களும், நறுமணப் பயிர்களான ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், திப்பிலி போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது. மரப்பயிர்களில் பணப்பயிராக இருக்கும் இந்த ரப்பருக்கு எப்போதும் மவுசு கூடுதல்தான்.

எனது ரப்பர் தோட்டம் குமாரபுரம் அருகே உள்ள தவறக்குழியில் அமைந்திருக்கிறது. இங்கு தென்னையும் ரப்பரும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தென்னையில் போதிய வருமானம் இல்லாததால், மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் தென்னைக்கு மாற்றாக ரப்பர் சாகுபடி அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரியின் மேற்குப் பகுதி மலைகள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இதனால் இப்பகுதி ரப்பர் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பகுதியாக திகழ்கிறது. எங்கள் அப்பா காலத்தில், அவருக்குச் சொந்தமான 15 ஏக்கரில் ரப்பர் சாகுபடி செய்து வந்தார். இப்போது அதே 15 ஏக்கரில் நானும் ரப்பர் சாகுபடி செய்து வருகிறேன். ரப்பர் மரங்களைப் பொருத்தவரை ஒரு ஏக்கருக்கு 200 மரங்கள் இருக்கும். இவை செடியாக நடப்பட்டு, 7வது வருடத்தில் இருந்து பால்வெட்டும் பருவத்திற்கு வரும். அப்படி பால் வடிக்கும்போது மரத்தின் சுற்றளவு 22 அங்குலம் என இருக்க வேண்டும். இந்தளவுக்கு சுற்றளவு இருக்கிற மரத்தின் உயரம் 5.5 அடி வரை இருக்கவேண்டும். அப்போதுதான் ரப்பர் மரத்தில் பால் வெட்டுவதற்கு சரியான பருவமாக இருக்கும். சில ரப்பர் மரங்கள் மண்வளம் நிறைந்த பகுதிகளில் 5வது வருடத்தில் பால் வெட்டுவதற்கு தயாராகிவிடும். இந்த ரப்பர் மரங்களுக்கு பராமரிப்பு மிகக்குறைவுதான். இந்த மரங்களுக்கு தனியாக தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வருடத்திற்கு இரண்டு முறை மழை பெய்தாலே போதும். அதுபோக, வருடத்திற்கு 2 முறை உரமிட வேண்டும். எனது தோட்டத்தில் இருக்கிற மரங்களுக்கு ராக்பாஸ்பேட், பொட்டாஷ், யூரியா ஆகிய உரங்களை வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்கிறேன். உரம் போடும்போது ராக்பாஸ்பேட் எவ்வளவு எடுக்கிறோமோ அதற்கு ஒரு பகுதி பொட்டாஷ், ஒரு பகுதி யூரியா ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மரத்திற்கு 600 கிராம் வீதம் உரம் வைத்தால் போதுமானது. உரம் வைக்கும்போது மண்வளத்தைப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப வேளாண்மை அதிகாரிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு இந்த உரங்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது. வருடத்திற்கு 3 முறை ரப்பர் மரங்களுக்கு இடையே முளைத்திருக்கும் களைகள் அகற்றப்பட வேண்டும்.ரப்பர் மரத்தில் இருந்து பால் வருவதற்கு அதிக குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நீடிக்க வேண்டும். குளிர்ச்சியான காலத்தில்தான் இந்த மரத்தில் இருந்து பால் வடிக்க முடியும். பால் எடுப்பதற்காக ெவட்டப்படும் ரப்பர் மரத்தில் பிப்ரவரி மாதத்திலிருந்து பால் கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதத்தில் அதிக அளவு பால் கிடைக்கும். மற்ற மாதங்களில் குறைந்த அளவே ரப்பர் பால் கிடைக்கும். குமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் அதிக இழுவைத் திறன்கொண்டவை என்பதால், உலகத் தரத்தில் குமரி ரப்பருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 2004ம் ஆண்டு சுனாமி தாக்கிய பிறகு குமரி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை வெகுவா மாறிவிட்டது. இதனால் எப்போது அதிக பால் கிடைக்கும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. தற்போது மரத்தில் இருந்து பால் எடுத்து அதனை ரப்பர் ஷீட்டாக தயாரித்து விற்பனை செய்யும்போது ஒரு கிலோவுக்கு ரூ.145 கிடைக்கிறது. எனக்கு சொந்தமாக உள்ள ரப்பர் மரங்கள் வாரத்தில் 3 முறை வெட்டப்பட்டு பால் எடுக்கப்படுகிறது. ஒரு நாள் எடுக்கும்போது அதிக பட்சமாக 24 கிலோ வரை ரப்பர் ஷீட் கிடைக்கும். இதில் வேலை ஆட்கள், உரம், உலர வைக்கும் செலவு உள்பட அனைத்து செலவுகளும் போக ரூ.1000 முதல் ரூ.1500 ஆயிரம் வரை தினமும் வருவாய் கிடைக்கும். இந்த வருவாய் நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும்தான் கிடைக்கும். மற்ற மாதங்களில் இந்த வருவாய் குறைவாகத்தான் கிடைக்கும்.

ஆனால் ரப்பர் ஷீட் ரூ.200க்கு விற்பனை செய்தால், தினசரி வருவாயாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கிடைக்கும். மழைக்காலங்கள், வெயில் காலங்களில் ரப்பர் மரங்களில் பால்வெட்ட முடியாது. அப்போது எந்த வருவாயும் கிடைக்காது. ரப்பர் பால் கொடுக்கத் தொடங்கும் மரங்கள் 25 வருடத்தில் இருந்து 30 வருடங்கள் வரை பால் கொடுக்கும். அதன் பிறகு அந்த மரங்கள் விறகு, மற்றும் பர்னிச்சர் வேலைகளுக்கு வெட்டிக்கொடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் நிலப்பரப்பு சமமாக இல்லாததால், ரப்பர் சாகுபடி செய்வதற்கு ஏற்ற நிலமாக உள்ளது. குறிப்பாக ரப்பர் மரத்தின் அடிப் பகுதியில் தண்ணீர் தேங்கக்கூடாது. அப்படி தேங்கினாலும் தண்ணீரை வெளியேற்ற வழிவகை இருக்க வேண்டும். உலக சந்தையில் ரப்பர் ஷீட்டிற்கு விலை உயர்ந்தால், குமரி மாவட்டத்தில் உள்ள ரப்பர் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும்’’ என்று பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
அலோசியஸ் அம்புரோஸ்:
90802 21553.

மாற்றம் கண்ட ரப்பர் ஷீட்

குமரி மாவட்டத்தில் கடந்த 2003ம் ஆண்டில் ஒரு கிலோ ரப்பர் ஷீட் ரூ.23க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்பு விலை படிப்படியாக உயர்ந்து 2005க்குப் பிறகு ஒரு கிலோ ரூ.240 வரை விற்பனையானது. இந்த சமயங்களில் குமரி ரப்பர் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. ஆனால் பின்னர் விலை குறையத் தொடங்கியது. தற்போது ஒரு கிலோ ரப்பர் ஷீட் ரூ.145க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட நேர்பாதியாகத்தான் உற்பத்தி இருந்து வருகிறது என்கிறார் அலோசியஸ்.

You may also like

Leave a Comment

15 − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi