சென்னை: சென்னையில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ‘பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு’ நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் ‘கணித்தமிழ் 24’ மாநாடு நடத்தப்படும். ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் செயற்கை நுண்ணறிவு இயந்திரவழிக் கற்றல், Machine Translation, Sentimental Analysis, Large Language Model, Automatic Speech Recognition போன்றவற்றை தமிழில் உருவாக்கும் முயற்சியும் மாநாட்டின் இலக்காக இருக்கும்.
இந்த பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு 2024 பிப்ரவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு தொடர்பான கூடுதல் விவரங்களை www.kanitamil.in என்ற இணையதளத்தில் அறியலாம். இந்த பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டில் திட்டமிப்பட்டுள்ள அம்சங்கள் பின்வருமாறு:
* உரைகள் மற்றும் குழு விவாதங்கள்: தமிழறிஞர்கள், மொழித்தொழில்நுட்ப வல்லுநர்கள், மொழித் தொழில்நுட்பத்தை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களை சேர்ந்த ஆளுமைகள் வெவ்வேறு தலைப்புகளில் விரிவுரை வழங்குவார்கள். ஆளுமைகளுக்கு இடையேயான குழு விவாதங்களும் நடத்தப்படும்.
* ஆய்வுக் கட்டுரைகள்: தமிழ் மொழி மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மொழி சார்ந்த மென்பொருள் உருவாக்குவோரிடமிருந்தும் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, புத்தகமாக தொகுக்கப்படும். இயற்கை மொழிச் செயலாக்கம், இயந்திர மொழிபெயர்ப்பு, பேச்சுகளை புரிந்துகொள்ளல், உணர்வுப் பகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறும்.
* நிரலாக்கப் போட்டி: இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் என இரண்டு விதமாக நிரலாக்கப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டியின் வழியாக இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல் வழங்கப்படுவதோடு, சிறந்த முயற்சிகளுக்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.
* கண்காட்சி: மொழி தொழில்நுட்பங்கள் தொடர்பான அதிநவீன தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாகக் கண்காட்சி அமையும். தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், புத்தொழில் நிறுவனத்தினர் ஆகியோர் இதில் பங்கேற்பார்கள். செயற்கை நுண்ணறிவு, அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை உள்ளிட்ட தளங்களில் நடைபெற இருக்கும் பன்னாட்டு மாநாடு அடுத்துவரும் சவாலான தொழில்நுட்ப யுகத்தை எதிர்கொள்வதற்கான அடித்தளங்களை அமைத்து தரும்.
மேலும், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் கணித்தமிழ் தொடர்பாக நடந்திருக்கும் விவாதங்கள், முயற்சிகள், முன்னெடுப்புகள் முதலியவற்றை உள்ளடக்கிய சிறப்பு மலர் ஒன்றும் பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப்படும். மாநாட்டுக்கென பிரத்யேக இலச்சினை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள இந்த மாபெரும் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு தமிழ் மொழியைக் காப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு திட்டத்தை முன்னோடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.