புதுடெல்லி: இந்திய அணி நட்சத்திர வீரர் ஷிகர் தவான், சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010ல் ஆஸ்திரேலியாவு எதிராக விசாகப்பட்டணத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான தவான் (38 வயது), தொடர்ந்து 2011ல் டி20, 2013ல் டெஸ்ட் அணிகளிலும் இடம் பிடித்தார். அதிரடி தொடக்க வீரராக முத்திரை பதித்த தவான் 34 டெஸ்டில் 2315 ரன் (அதிகம் 190, சராசரி 40.61, சதம் 7, அரை சதம் 5), 167 ஒருநாள் போட்டிகளில் 6793 ரன் (அதிகம் 143, சராசரி 44.11, சதம் 17, அரை சதம் 39) மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி 1759 ரன் (அதிகம் 92, சராசரி 27.92, அரை சதம் 11) விளாசி உள்ளார்.
இந்தியா யு-19, இந்தியா ஏ, டெல்லி அணிகளுக்காகவும் முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ள அவர், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக களமிறங்கி உள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள தவான்… உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை போன்ற பெரிய தொடர்களில் அதிக ரன் குவித்து விருதுகளை அள்ளியுள்ளார்.
* 2004 யு-19 உலக கோப்பையில் தொடர் நாயகன்.
* 2013 சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன்.
* 2014 ஆசிய கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்.
* 2015 உலக கோப்பையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்.
* 2017 சாம்பியன்ஸ் டிராபில் இந்தியாவுக்காக அதிக ரன் குவிப்பு.
* 2018 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன்.
* ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக 222 போட்டியில் விளையாடி உள்ள ‘கபார்’ தவான் 6769 ரன் குவித்து கோஹ்லிக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.