Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொடரும் அதிரடி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை: அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுத்து வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு காசாவில் ராணுவ நடவடிக்கை தொடர்பாக போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் பதிலடியின்போது குழந்தைகள் உட்பட பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் காரணமாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த நீதிமன்றத்தில் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ உறுப்பினராக இல்லை. இந்நிலையில் அதிபரான டிரம்ப் பதவியேற்ற பின்னர் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த உத்தரவில்,‘‘அமெரிக்காவையும், அதன் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலையும் குறிவைத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் மீது ஆதாரமற்ற கைது வாரண்டுகளை பிறப்பித்து அதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது எந்த அதிகார வரம்பும் இல்லை. இரு நாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளால் நீதிமன்றம் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை காட்டியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா உறுதியான மற்றும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைளை மேற்கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

* உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்த நிலையில், அவரது தடைகளுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கையானது சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை பணிகளுக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சியாகும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* மார்ச் 7ம் தேதி எச்-1பி விசா பதிவு

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்-1பி விசாவை நம்பியுள்ளன. 2026ம் நிதியாண்டிற்கான வெளிநாட்டு கெஸ்ட் தொழிலாளர்களுக்கான எச்-1பி விசாக்களுக்கான பதிவானது மார்ச் மாதம் 7ம் தேதி தொடங்குகின்றது. இந்த பதிவானது 24ம் தேதி முடிவடைவதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் தெரிவித்துள்ளது.

* சீனா எதிர்ப்பு

பனாமா கால்வாயை திரும்ப பெறுவதாக அமெரிக்க அச்சுறுத்தியது. இதனை தொடர்ந்து சீனாவுடனான முக்கிய உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கு பனாமா மறுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக தான் பனாமா இதுபோன்று ஒப்பந்தத்தை மறுப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் வற்புறுத்தல் காரணமாக பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்றார்.