மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான சியாட் விருதுகள் வழங்கப்பட்டது. மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் உலக கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை வாங்கினர். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இதே போல சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை விராட் கோஹ்லி கைப்பற்றினார். அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் போன்ற சாதனைகளை விராட் கோஹ்லி படைத்திருந்தார்.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பவுலருக்கான விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது. டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு தனது சிறப்பான பங்களிப்பை அளித்த முன்னாள் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான விருது ஜெய்ஸ்வாலுக்கும், சிறந்த டெஸ்ட் பவுலருக்கான விருது தமிழக வீரர் அஸ்வினுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த டி20 பேட்ஸ்மேனுக்கான விருதை இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டும், சிறந்த டி20 பவுலருக்கான விருதை நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தியும் கைப்பற்றினர்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்த சாய்கிஷோருக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த தலைமை பண்பை வெளி காட்டியதற்கான விருது ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து விளையாட்டுத் துறையில் சிறந்த நிர்வாகத்தை வெளிப்படுத்தியதற்காக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த இந்திய வீராங்கனை பேட்டர் பிரிவில் ஸ்மிருதி மந்தானாவுக்கும், பவுலர் பிரிவில் தீப்தி சர்மாவுக்கும் விருது வழங்கப்பட்டது.