சென்னை: அருந்ததியர் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை அருந்ததியர் சமுதாயத்தினர் இன்று காலை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் கொண்டு வந்த அருந்ததியினருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான், ஆதி தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன், திராவிட தமிழர் கழகத்தின் தலைவர் தமிழ்மணி, அருந்ததியர் கட்சியின் மாநில தலைவர் புருஷோத்தமன், திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி, தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் தலைவர் மதிவண்ணன், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழ் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அகத்தியன், சமநீதி புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சலாம், சமூக நீதி மக்கள் கட்சியின் தலைவர் வடிவேல் ராமன், மற்றும் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் ஆறுச்சாமி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் கனிமொழி பத்மநாபன் உள்ளிட்ட அருந்ததியர் சமுதாய சங்கத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர், ஆதி தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் நிருபர்களிடம் கூறுகையில், அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்த பெருமை முன்னாள் முதல்வர் கலைஞரையே சாரும். இட ஒதுக்கீட்டை பாதுகாத்த பெருமை தமிழக முதல்வர் ஸ்டாலினை சாரும். முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறோம். மேலும், இட ஒதுக்கீடுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களுடைய வளர்ச்சிக்கு எதிராக இருக்கக்கூடிய கிரிமிலேயர் சரத்துகளை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது என்ற ஒரு கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து, ஆதி தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் கூறுகையில், “அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை கோரி 30 ஆண்டுகளாக போராட்டம், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறோம். இந்த கோரிக்கைக்காக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அருந்ததியர் உள் ஒதுக்கீடு வந்தபிறகு எங்கள் சமுதாயத்தில் மருத்துவர்கள், நீதிபதி, வி.ஏ.ஓ, பொறியாளர் என பல பதவிகளுக்கு வந்துள்ளனர். இந்த தீர்ப்பின் அடிப்படையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அருந்ததியர், ஆதி தமிழர் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3 விழுக்காடு இருந்து 6 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றார்.