இடைப்பாடி: இடைப்பாடி அருகே காவிரி உபரிநீர் பெருக்கெடுத்து வந்ததால், பனங்குட்டை ஏரி தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின் மூலம் 100 எரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டதில்(பகுதி -2) திப்பம்பட்டியில் இருந்து நங்கவள்ளி எரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த ஏரி நிரம்பியதும், நங்கவள்ளி ஏரி மற்றும் வனவாசி ஏரி, சாணாரப்பட்டி ஏரி நிரம்பி சூரப்பள்ளி வழியாக எலவம்பட்டி சின்ன ஏரி, எலவம்பட்டி பெரிய ஏரி, பணிக்கனூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பியதை தொடர்ந்து நேற்று அதிகாலை இடைப்பாடி அருகே சமுத்திரம் பனங்குட்டை ஏரிக்கு உபரிநீர் பெருக்கெடுத்து வந்தது. இதில், அங்குள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது.
இதனால், அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சித்திரப்பாளையம் மற்றும் முத்தீயம்பட்டி காட்டுவளவு பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகளும், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாளத்திற்கு பதிலாக அரசு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.