புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விவரங்களை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக எதிர் மனுதாரர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த 15ம் தேதி உத்தரவிட்டிருந்தனர். அதுகுறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மேற்கண்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சலேஷ் குமார் உள்பட சிலர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர் திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இருப்பினும் சம்பவம் நடந்தபோது இருந்த அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, மற்றொரு விசாரணை அமைப்பு எப்படி விசாரிக்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், இருப்பினும் இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக எதிர் மனுதாரர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாகவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். இந்த மனு மீது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.