Monday, March 4, 2024
Home » இடைக்கால நிதிநிலை அறிக்கை 10 ஆண்டுகால ஒன்றிய பாஜ அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாக உள்ளது: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம்

இடைக்கால நிதிநிலை அறிக்கை 10 ஆண்டுகால ஒன்றிய பாஜ அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாக உள்ளது: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம்

by Ranjith

சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கை, 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாக உள்ளது என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்து, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

* கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு சில கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014ல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத ஒன்றிய பாஜ அரசு, சாதனைகள் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஏமாற்றம் மிகுந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கான உரிய பாடம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் பாஜவுக்கு புகட்டப்படும்.

* வைகோ (மதிமுக): நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு- செலவு திட்ட அறிக்கையில், பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா காலகட்டத்திற்கு பின்பு கடந்த 4 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி என்பது 7 சதவீத அளவை தொடவில்லை. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பலன் அடைந்திருக்கின்றன. 10 ஆண்டுகளில் 19 எய்ம்ஸ் மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அறிவித்துள்ள நிதியமைச்சர், தமிழ்நாட்டில் மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி மூச்சு விடவில்லை. ஒட்டுமொத்தமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை 10 ஆண்டு கால பாஜ அரசின் தோல்வியை பிரதிபலிப்பதாகத் தான் இருக்கிறது.

* முத்தரசன் (இந்திய கம்யூனிஸட் கட்சி): ஐக்கிய விவசாயிகள் முன்னணியும், ஒன்றிய தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையிலும், அதன் கோரிக்கைகளை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ளாத நிதி நிலை அறிக்கை ஒன்றிய அரசின் எதேச்சதிகார கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை உயர்த்தி பிடிக்கிறது. நாட்டின் செல்வ உற்பத்தியின் உயிர் நாடியான உழைக்கும் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொள்ளாத நிதிநிலை அறிக்கை, ராமர் கோயிலையும், அதனை சுற்றி கட்டமைக்கப்படும் அரசியல் வியூகத்தையும் வார்த்தை ஜாலங்களில் கட்டமைத்துள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கை வழக்கம் போல் ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கும், சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கும் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது.

* கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): இந்தியா வரலாறு காணாத வளர்ச்சியடைந்து விட்டது போல வெற்று முழக்கங்களையும், வாய்ச்சவடால்களையும் தவிர இடைக்கால பட்ஜெட்டில் எதுவும் இல்லை. புதிதாக எந்த முன்வைப்புகளும், திட்டங்களும் இல்லாத நிலையில் கடந்த காலத்தைப் போலவே பெருமுதலாளிகளுக்கும், அந்நிய மூலதனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கும் கொள்கை தொடரும் என்பதே இதன் பொருள். ஒட்டுமொத்தத்தில் ஏழை, எளிய, நடுத்தர, சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மறுத்தும், அவர்களின் தலையில் சுமைகளை ஏற்றி, வாழ்வாதாரத்தை பறித்து வயிற்றில் அடித்துவிட்டு சாதனை பட்ஜெட் என்று தம்பட்டம் அடித்துள்ளனர்.

* ஜி.கே.வாசன் (தமாகா): பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மக்களை, நாட்டை, பொருளாதாரத்தை, பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டவை. அந்த வகையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, ஒன்றிய இடைக்கால பட்ஜெட் என்பது குறுகிய சில மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால் அவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து அனைவருக்கும், அனைத்தும் என்ற நோக்கம் நிறைவேற ஒன்றிய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

* டிடிவி.தினகரன் (அமமுக): பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி, கட்டுமான பணிகள் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது அவர்களை கவலையடையச் செய்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளுக்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

You may also like

Leave a Comment

eighteen − 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi