மதுரை: அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதால், கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சென்னை, பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்தப்படி பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு, இலங்கை நாட்டின் தரப்பில் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது. கடந்த 1983 முதல் 2013 வரை 111 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 439 பேர் படுகாயமடைந்துள்ளனர். 136 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்கள் கைது தொடர்ந்து கொண்டே போகிறது.தமிழ்நாட்டு பாரம்பரிய மீனவர்களின் உரிமையை நிலை நாட்டவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஒன்றிய அரசு தலையிட வேண்டுமென தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசு தரப்பில் உறுதியான நடவடிக்கை எதுவும் இல்லை. தற்போது 22 இந்திய மீனவர்களை இலங்கை படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். எனவே, 22 மீனவர்களை விடுதலை செய்யவும், இந்தியா – இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா, நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஜூலை 14ல் நாடு திரும்பியுள்ளனர். கச்சத்தீவு விவகாரம் அரசின் கொள்கை முடிவு’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.