ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைக்கும், ஆர்வத்துக்கும் உகந்த வாய்ப்பும், ஊக்கமும் கிடைத்தால் அதன் மூலமாக வாழ்வில் உயர்ந்து விடுகிறார்கள். ஆனால் வாய்ப்பு இருந்தும் திறமையை வெளிக்காட்ட முயற்சிக்காதவர்கள் ஒருபோதும் வெல்வது இல்லை.தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்ல விரும்பினால், முதலில் உங்கள் அணுகுமுறையை மாற்றியமையுங்கள்.ஒரு குருவிடம் சில சீடர்கள் இருந்தார்கள். ஒரு நாள் குரு, மண்பானை ஒன்றைத் தலைகீழாக கவிழ்த்தி வைத்துவிட்டு, தனது சீடர்களை அழைத்தார். ஒரு சீடனைப் பார்த்து இந்த பானையில் என்ன இருக்கிறது என்று கேட்டார். ஒன்றுமில்லை குருவே! அதனால்தான் இதனைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்திருக்கிறீர்கள் என்றார்.
குரு அடுத்த சீடனைப் பார்த்தார்.அந்த சீடனோ பானையை நேராக நிமிர்த்தி வைத்து,அதில் உள்ளே கையை விட்டுத் தேடி விட்டு ஒன்று மில்லை குருவே என கூறியவாறு தனது கையை விரித்தான். பிறகு இன்னொரு சீட்டனைப் பார்த்தார். அவன் குருவே இந்தப் பானை நிறைய காற்று இருக்கிறது என்று சொன்னான். குரு நீ சொல்வதே உண்மை. இந்தப் பானை நிறைய காற்று உள்ளது என்பது சரிதான் என்றபடி சிரித்தார். பிறகு இதில் உள்ள காற்றை வெளியேற்ற முடியுமா?என்று இரண்டாவது கேள்வியைக் கேட்க ஆரம்பித்தார்.
முதல் சீடன் முடியவே முடியாது என்றான். இரண்டாம் சீடனோ ஒரு கல்லைத் தூக்கி,பானை மீது போட்டு உடைத்தால் காற்று வெளியேறி விடும் என்றான். குரு மூன்றாம் சீடனைப் பார்த்தார்.
குருவே இந்தப் பானையை தண்ணீரால் நிரம்பினால் காற்று தானாக வெளியேறிவிடும் என்று சொன்னார்.குரு இந்த மூன்றாம் சீடனின் மதிநுட்பத்தைப் பாராட்டினார்.
இவ்வாறு தான் நமது வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவரவர்கள் அறிவுக்கு தகுந்த மாதிரிதான் அவற்றை எதிர்கொள்கிறோம். பாதை ஒன்றாக இருந்தாலும் அதில் பயணம் செய்பவர்களின் நோக்கம் வேறு வேறாக தான் இருக்கும். எதையும் மேலோட்டமாக பார்க்காமல் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்கும் போது தான் வாழ்வின் அதிசயங்கள் புரியும்.ஆகவே எவரைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்துங்கள் வெற்றியை நோக்கி செல்லுங்கள்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனை மங்கையைச் சொல்லலாம்.மங்களூரை சேர்ந்தவர் தன்வி,அவரது தந்தை ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் இல்லத்தரசி.
தன்விக்கு எட்டு வயதாக இருக்கும் போது தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.அந்த விளையாட்டுகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. பொழுதுபோக்காக இருந்த இந்த விளையாட்டுகள் ஒரு கட்டத்தில் அவருக்கு வாழ்க்கையின் இலட்சியமாகவே மாறியது. ஆனால் இலட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதையில் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.17 வயதானபோது தன்வி வளர்ந்த சூழலில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பெண்கள் ஷார்ட்ஸ் அணிவதும், தண்ணீரில் இறங்கி விளையாடுவதும் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயமாகவே இருந்துவந்தது. தன்வியின் பெற்றோருக்கு தனது மகள் அலைச்சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டில் அணியும் உடை குறித்து உற்றார், உறவினர்களால் பல்வேறு பிரச்சனைகளும், ஆட்சேபனைகளும் எழுந்தது.
தன்வியை இழிவுபடுத்தும் விதத்தில் எல்லோரும் அவருடைய பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். இருந்தும் தன்வியின் பெற்றோர் அவரது மகளை பெரிதும் நம்பினார்கள். விளையாட்டில் தனது மகளுக்கு இருந்த ஆர்வத்தை புரிந்துகொண்டனர். அலைச் சறுக்கு விளையாட்டு என்பதால் அவருடைய பெற்றோருக்கு ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதும் தன்வியின் மனதைரியம் அவருடைய பெற்றோருக்கு பயத்தை போக்கியது. அலை சறுக்கு (சர்ஃபிங்) விளையாட்டில் கடுமையாக உழைத்தார் தன்வி. தன்னுடைய வலிமையை முழுவதும் செலுத்தி விளையாடினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஏப்ரில் ஜில்க் என்பவர் புகழ்பெற்ற அலைச் சறுக்கு வீராங்கனை, அவர் தனது கணவருடன் இந்தியாவில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். மேலும் இந்தியாவின் கலாச்சாரம் குறித்து அறிந்து கொண்டார். பெண்கள் தங்களது கனவுகளை நோக்கி பயணிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் கண்கூடாகப் பார்த்தார்.இந்தியாவில் தண்ணீர் விளையாட்டு களில் ஈடுபட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான மங்களூருவைச் சேர்ந்த மந்திரா சர்ஃபிங் க்ளப் குறித்து கேள்விப்பட்டார் ஏப்ரில். சர்ஃபிங் மற்றும் பெடலிங் விளையாடுவதில் பல பெண்களுக்கு ஆர்வம் உள்ளபோதும் குடும்பத்திலுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக முன்வரத் தயங்குகின்றனர் என்பதையும் புரிந்து கொண்டார்.
இந்த நேரத்தில்தான் ஏப்ரில் தன்வியை சந்தித்தார். அப்போது தன்விக்கு 14 வயது.அலைச் சறுக்கு விளையாட்டில் அதீத ஆர்வத்துடன் காணப்பட்டார் தன்வி. கட்டுப்பாடுகள் குறித்து சற்றும் கவலைப்படாமல் தண்ணீரில் மூழ்கி எளிதாக அலைச் சறுக்கில் ஈடுபட்டார். தன்வி அலைச் சறுக்கு(சர்ஃபிங்) விளையாட்டில் சாதிப்பார் என்பதை அவரது கண்களில் மிளிர்ந்த ஆர்வமானது ஏப்ரிலுக்கு தெளிவு படுத்தியது. தன்விக்கு சர்ஃபிங் விளையாட்டு சார்ந்த நுணுக்கங்களை எல்லாம் கற்றுத் தந்தார் ஏப்ரில்.இந்த நிலையில் ஏப்ரில் அமெரிக்காவிற்கு திரும்பினார். தன்வி மற்றும் மந்திரா சர்ஃபிங் க்ளப்பை அவரால் மறக்க முடியவில்லை. சமூக வலைத்தளம் வாயிலாக தன்வியுடன் தொடர்பில் இருந்தார் ஏப்ரில். சர்ஃபிங் விளையாட்டு சார்ந்து தன்வியைத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார். இந்த முயற்சிகளுக்கான பலனும் கிடைத்தது. 2014-ல் சர்ஃபிங் விளையாட்டில் இந்தியா சார்பில் பல பட்டங்களை வென்றார் தன்வி. கோவளத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றார்.
2015-ம் ஆண்டின் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப்புகளிலும் பல பட்டங்களை வென்றார். 2017-ம் ஆண்டில் சர்ஃபிங் சர்வதேச அளவிலான போட்டிகளில் இருமுறை இந்தியா சார்பில் பங்கேற்று 17 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில்
மூன்றாம் இடம் வகித்தார்.இந்தியாவில் இது ஒரு முக்கிய விளையாட்டு என்றபோதும் தற்போது அதிக எண்ணிக்கையில் பெண்கள் பங்கேற்று வருவது வரவேற்கத்தக்கதாக உள்ளது. சர்ஃபிங் விளையாட்டு என்பது பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படவும், அறிவுத்திறனை கூர்மையாக்கிக்கொள்ளவும் உதவுகிறது.பெண்கள் தங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும், உங்கள் முன்னேற்றத்திற்கு எதிரான தடைகளை தகர்த்தெறிந்து சாதிக்க வேண்டும் என்பதுதான் தன்வியின் வாழ்க்கை இன்றைய பெண்களுக்கு உணர்த்துகிறது. தன்வி தனது இலக்கை நோக்கிச் செல்லும் பயணத்தில் வெற்றி பெற்று பெண்களால் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். ஆர்வம் என்ற முதல் அடியை எடுத்து வைப்பதில் தான் முன்னேற்றமே இருக்கிறது. ஆர்வத்துடன் செயல்படுங்கள், இலக்கை வெல்லுங்கள்.