முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களிடம் கனவு காணுங்கள் என்றார்.அதன் காரணமே, கனவு என்பது ஒரு நல்ல அனுபவமாக அமையும் என்பதுதான். நமது சிந்தனைகள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதற்கு ஒரு உருவம் கொடுப்பவையாகத்தான் கனவுகள் அமைய வேண்டும். டாக்டராக வேண்டும் என்று ஒருவர் கனவு கண்டால் அவரது இலக்கு டாக்டர் படிப்பு என்பதாக இருக்கும். அந்த இலக்கை கொடுப்பது அவருடைய கனவு. ஆனால் கனவு மட்டும் கண்டுவிட்டு இருக்கக் கூடாது, உடன் முயற்சியும், பயிற்சியும் இருக்க வேண்டும். வெறுமனே கனவு காண்பது என்பது காட்டில் காய்ந்த நிலவு, கடலில் பெய்த மழை போன்று பயனற்றது. கனவை நனவாக்கும் செயல்களில் ஈடுபடும்போது தான் கனவுக்கு அர்த்தம் பிறக்கும்.மார்க்கோனியின் கனவு வானொலியாக வடிவம் எடுத்தது. கிரகாம் பெல்லின் கனவு தொலைபேசியாக உருவானது. ரைட் சகோதரர்களின் கனவு ஆகாய விமானமாக அவதாரம் எடுத்தது. சுயமாக முடிவெடுக்கும் திறன், சுயசிந்தனை போன்றவை இல்லாதவர்கள் பெரும்பாலும் சாதாரண மக்களாகவே காலத்தை ஓட்டுகின்றனர். இப்படிப்பட்ட மக்கள் தாங்கள் எதை இழந்தோம் என்பது பற்றிய சிந்தனைகூட இல்லாதவர்கள்.லட்சியத்தை வகுத்துக்கொண்டு,குறிப்பிட்ட வயதில் இதை அடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கினால், அது வெற்றியாக மலரும். அத்தகைய வெற்றி வியக்கத்தக்க வெற்றியாக அமையும்.அப்படி சிறுவயதிலேயே வியக்கத்தக்க வெற்றியைப் பெற்ற ஒருவர்தான் ஆத்யா.
பெங்களூருவின் கிரீன்பீல்டு பள்ளியில் படித்து வரும் எட்டு வயது மாணவி ஆத்யா பென்னூர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எவரெஸ்ட் பேஸ் கேம்பில் ஏறி சாதனை படைத்த நிலையில், தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள 19,340 அடி உயரமான கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறிய உலகிலேயே இளம் வயதில் அதுவும் எட்டு வயதில் சாதித்த சிறுமி என்ற வியத்தகு சாதனையைப் புரிந்துள்ளார்.ஆத்யாவின் தந்தை ஹர்ஷா மலை ஏறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எட்மண்ட் ஹிலாரியுடன் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறிய டென்சிங்கின் மகன் தான் ஜாம்லிங். பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் டென்சிங் ஜாம்லிங் ஊக்கமான உரையை கேட்ட பிறகு, ஹர்ஷாவுக்கு மலையேறும் ஆர்வம் மிகுதியானது. இந்த நிலையில் தனது தந்தை ஹர்ஷா டிரெக்கிங் சென்ற போது, ஆத்யாவிற்கும் மலையேறும் ஆர்வம் உண்டானது.அதனால் இளம் வயதான ஆத்யாவின் உடல் தகுதியை மேம்படுத்த,தனது மகளுக்கு அவர் டென்னிஸ் விளையாட கற்றுத் தந்தார்.
மலையேறுவதில் உனக்கு விரும்பம் உண்டா என அவரது தந்தை விளையாட்டாக ஆத்யாவிடம் கேட்க, அவரும் விருப்பம் தெரிவிக்க மிகச்சிறிய வயது என்று கூட பார்க்காமல் தனது மகளுக்கு மலை ஏறுவதற்கான பயிற்சி கொடுக்க முன்வந்தார். ஆத்யா ஒரு மாதகாலம் பயிற்சி மேற்கொண்டார். வழக்கமாக செய்யும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், மலையேறுவதற்காக நீண்ட தொலைவு நடக்கும் பயிற்சியும் மேற்கொண்டார்.மலையேறுவதற்கு உடலின் கீழ்ப் பகுதிகள் அதிகம் வலிமைபெற வேண்டும் என்றால் தன்னுடைய பாதங்கள் நன்றாக நடக்க பழக வேண்டும் என்பதை இளம் வயதிலேயே புரிந்துகொண்டார். அதற்காக பல மாதம் தனிப் பயிற்சி பெற்று மலையேறுவதற்கு தயாரானார்.
முதன்முதலாக நேபாளத்தின் லூக்லாவில் இருந்து மலையேறத் துவங்கிய போது, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கும் போது, நல்ல மழை பெய்து பாதையில் நிறைய பனிக்கட்டிகள் இருப்பதை கண்டார். அங்கு நிறைய நாய்களும் இருந்தன.இருந்தபோதும் எந்த பயமும் இல்லாமல் மலையேறுவதை மட்டும் தன் இலக்காக கொண்டு ஒரு குடிசையில் தங்கி, சிறிது உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் மலை ஏற தொடங்கினார்.சிறு குழந்தையாக அப்பாவித்தனமாக இருந்துகொண்டு வியக்க வைக்கும் சாதனையை புரிந்துள்ளார் ஆத்யா சிறுவயதிலே ஆத்யாவின் மனஉறுதி அசாத்தியமானது. 17,598 அடியில் உள்ள எவரெஸ்ட் பேஸ்கேம்பை அடைய லூக்லாவில் இருந்து பத்து நாட்கள் மலையேற வேண்டும். மலையேறும் பாதையில் அதிகம் பேர் இல்லை.ஆத்யா தனது தந்தை மற்றும் சில வழிகாட்டிகளுடன் சென்றார்.
தட்டையான பகுதிகளில் என் உயரம் காரணமாக ஆத்யாவுக்கு என்னால் ஈடு கொடுக்க முடிந்தது. ஆனால் செங்குத்தான இடங்களில் அவர் வேகமாக ஏறினார் என்கிறார் அவரது தந்தை ஹர்ஷா.ஆத்யா முதல் நாளில் மட்டும் தான் களைப்பாக உணர்ந்தார். ஆனால் இரண்டாம் நாள் முதல் எல்லாம் எளிதானது.பாதை மிகவும் அழகாக இருந்தது. சிகரத்தை தொடரும் வரை காட்சிகள் ரம்மியமாக அமைந்தன என்கிறார் இளம் சாதனையாளர் ஆத்யா.இதன் பிறகு, ஆத்யா மீண்டும் தனது தந்தையின் தொடர் ஊக்கத்தால் தொடர்ந்து, ஆப்பிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோவை தேர்வு செய்து அத்தகைய உயர்ந்த சிகரத்தில் ஏற வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை தீர்மானித்தார்.
இதற்காகத் தயராக மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டார். செங்குத்தாக செல்வதை தவிர்த்து, மீண்டும் நீச்சல் மற்றும் நீண்ட தொலைவு நடையில் கவனம் செலுத்தி மூன்று மாதம் தீவிரப் பயிற்சி செய்தார்.பயிற்சி சிலநேரங்களில் கடினமாக இருந்தது எனினும், பெற்றோர்கள் அவரைத் தொடர்ச்சியாக பயிற்சி செய்ய ஊக்குவித்துள்ளனர்.அதனால் மீண்டும் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார்.சிகரத்தை அடைய ஐந்து வழிகள் உள்ளன. எளிய வழியில் சென்றால் 5-6 நாட்களில் உச்சியை அடைந்துவிடலாம்.ஆனால்,அது மலையேறுதலுக்கு சிறந்ததாக அமையாது என்று முடிவு செய்தார்ஆத்யாவின் தந்தை ஹர்ஷா.எனவே அவர்கள் நீளமான,கடினமான பாதையை தேர்வுசெய்தனர். ஏழரை நாட்கள் மலையேறினர். தினமும் 10 மணி நேரம் மலையேறினர். உச்சியை அடையும் நாளில் மட்டும் 17 மணி நேரத்திற்கு மேல் நடக்க வேண்டியிருந்தது. எட்டு வயது குழந்தையான ஆத்யாவிற்கு இது மிகவும் கடினமானது. 20 டிகிரி மைனஸ் வெப்பம் இருந்ததால் இன்னும் சவாலானதாக இருந்தது.
மிகவும் கடினமாக இருந்ததால், மகளின் நிலையைப் பார்த்து, அதோடு மலையேறுவதை விட்டுவிடலாம் எனும் நிலைக்கு சில நேரங்களில் அவரது தந்தை வந்துள்ளார். இருந்த போதும் மலை ஏறுவதற்கு தனது மகள் தயாராக இருந்தார்.அதனால் தந்தை மற்றும் மகள் இருவரும் தொடர்ந்து முயற்சியுடன் மலையேறு வதில் ஈடுபட்டு கிளிமாஞ்சாரோ மலை உச்சியை அடைந்து வியக்கத்தக்கசாதனையைப் புரிந்தார் ஆத்யா.சிறுவயதிலேயே மிகப்பெரிய சாதனையை புரிந்துள்ள ஆத்யா சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்துகொண்டிருக்கின்றார்.மேலும் ரஷ்யாவில் உள்ள எல்ப்ரஸ் மலையை அடுத்த இலக்காக கொண்டுள்ள ஆத்யா அதற்கான பயிற்சியையும் துவக்கியுள்ளார். அவருக்கு இன்னமும் பல மலை உச்சிகளும், சிகரங்களும் காத்திருக்கின்றன.ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதே ஆத்யாவின் கதை நமக்கு உணர்த்துகிறது.