ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் வெள்ளதடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஆரணியாற்றின் கரையோரத்தில் கலைஞர் நகர், கொய்யாதோப்பு, மேல் சிட்ரபாக்கம், கீழ் சிட்ரபாக்கம் போன்ற பகுதிகள் உள்ளது. மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால், மேற்கண்ட பகுதிகளில் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து விடும். இதனால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில் வெள்ள தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரூ.3.17 கோடி நிதி ஒதுக்கி, பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி, சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. மேலும் ஆரணியாற்றின் கரையோரத்தில் வெள்ள தடுப்புசுவர் கட்டுவதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இந்த பணிகள் வரும் டிசம்பர் மாதம் மழை காலத்திற்குள் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.