நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் கையில். அந்த மாணவர்களை கையாளும் முறையிலும், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் இடத்திலும் அரசின் செயல்பாடு மேலோங்கி நிற்க வேண்டும். நாட்டிற்கே முன்னோடியாக மாணவச் செல்வங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறது திராவிட மாடல் அரசான தமிழ்நாடு அரசு. பள்ளிக்கல்வியில் செய்கின்ற புரட்சி, உயர்கல்வியில் சாதனை படைக்கச் செய்கிறது. பள்ளி மாணவர்களுக்கு தேவையான நவீனத்தையும், அவர்களின் ஆற்றலை பெருக்கக்கூடிய நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களையும் தந்து தமிழக மாணவர்களை மிளிரச் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்தை பெற்றிருக்கிறது என்றால், அதன் உழைப்பு கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறையில் நிகழ்ந்தவையாகும். தனியாருக்கு போட்டியாக திகழும் வகையில் அரசு மாடல் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்ட அதிநவீன ஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், அனிமேஷனில் எளிமையாக புரியும் வகையில் கற்றுக்கொடுப்பது, மாடல் கேள்வித்தாள்கள் மூலம் மாணவர்களின் திறனை வளர்ப்பது, மணற்கேணி செயலி என பல்வேறு புதுமைகளை புகுத்தி அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வியை முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு உயர்த்தி சாதனை படைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
அரசு பள்ளி மாணவிகளை அதிகளவு உயர்கல்வியில் சேர்க்க புதுமைப்பெண் திட்டம் எப்படி உதவிக்கொண்டிருக்கிறதோ, அதுபோலவே தமிழ்புதல்வன் திட்டம் திகழப்போகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. காரணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரிக்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அறிவின் ஆற்றலை பெருக்கிட உயர்கல்வி மிகவும் அவசியம், அதுவும் முதன்மை கல்வி நிறுவனங்களில் படித்து நாட்டிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என, தான் செல்லும் இடமெல்லாம் மாணவ கண்மணிகளிடம் எடுத்துரைக்கிறார் தமிழ்நாடு முதல்வர்.
ஐஐடி, என்ஐடி போன்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை திராவிட மாடல் அரசு வந்தபின், பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 75 அரசு பள்ளி மாணவர்களே சேர்ந்திருந்தனர். அது 2023ல் 274 ஆகவும், நடப்பாண்டு அது இரு மடங்காக 447 என அதிகரித்திருக்கிறது. இந்த மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,‘‘உங்கள் பின்னால் இந்த அரசு இருக்கிறது, நீங்கள் தனி ஆள் கிடையாது, உங்கள் முன் தோன்றும் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து செல்லுங்கள்’’ என நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி மட்டுமின்றி தேசிய சட்டப்பல்கலைக்கழகங்கள், விண்வெளி ஆராய்ச்சித்துறை என அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கும் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விச்செலவை அரசே முழுமையாக ஏற்கும் என்றும், மலேசியா, தைவான், ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் சேர செல்லும் மாணவர்களின் முதல் பயணச்செலவை அரசு ஏற்கும் என்றும் அறிவித்திருக்கிறார் முதல்வர். உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்பிற்கு எந்த அரசு அதிமுக்கியத்துவம் அளிக்கிறதோ, அந்த அரசின் செயல்பாடு காலத்திற்கும் நிலைத்து நிற்கும். அத்தகைய செயல்களை செய்யும் தமிழ்நாடு அரசு வானுயரத்திற்கு உயரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நம் மாணவர்கள், எதிர்காலத்தில் தமிழ்நாடு, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதோடு நிற்காமல் உலகின் அறிவுச்சொத்துக்களாக விளங்குவார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.