‘‘இலைக்கட்சியில் மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மெடல் மாவட்டத்தில் மா.செ. பதவியை பிடிக்க மாஜிக்களுக்குள் கடும் போட்டி நிலவுதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 72ல் இருந்து 110 ஆக உயர்த்த முடிவெடுத்து அதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்காம்.. மெடல் மாவட்டம் இரண்டில் இருந்து மூணாக போகுதாம்.. இதற்காக ஒவ்வொரு சமூகத்திலும் பெருந்தலைகள் இப்பவே செல்வாக்கை காட்டி மா.செ. பதவியை வாங்க முயற்சி செய்றாங்களாம்..
இதில் கோட்டை என முடியும் ஊரை சேர்ந்த அதிர்ஷ்டமான பெயரை கொண்டவரும், மாஜி அமைச்சரான பல கட்சி தாவும் தொழிலதிபரும் முக்கிய போட்டியில இருந்தாங்க.. இப்போ மூணாவதாக மாஜி அமைச்சரான இன்பமானவரும் குதித்து கதிகலங்க வைக்கிறாராம்.. தலைமை தரப்பிலிருந்து கட்சியின் புதிய உறுப்பினர் கார்டுகளை எல்லாம் அந்தந்த மாவட்ட செயலாளருகிட்ட கொடுத்திருக்காங்க… ஆனால், பால்கோவா ஊருக்கு மட்டும் புதிய உறுப்பினர் கார்டுகளை இன்பமானவரிடம் கொடுத்துட்டாங்களாம்..
அதிரடியான தனது தந்தை போலவே மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம் அவர். இது மெடல் மாவட்டம் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்திருக்கும் முன்னாள் பால்வள மந்திரிக்கு புளியை கரைத்துள்ளதாம்.. இன்பமான நபரோ முன்னாள் பால்வளத்திற்கு சீனியர்… சேலத்துக்காரர் செட் என்பதால் ரொம்ப நெருக்கம். எனவே, எப்படியாவது மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்றிவிடணும்னு தலைநகரிலேயே தங்கி காய் நகர்த்தி வருகிறாராம்… அவருக்கு கட்சியில பலம் கூடுறதை பாத்து பால்வளம் பொங்கிக் கிடக்காராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மேல் படிப்பு படிக்கப்போன சாக்குல மலராத கட்சி தலைவரோட பல்ல புடுங்கியாச்சின்னு எதிர்க்கோஷ்டியினர் அடிச்சு சொல்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மலராத கட்சியோட மாநில தலைவரின் பவரை எப்போது பறிப்பார்கள் என்பது அக்கட்சியின் ரெண்டாங்கட்ட தலைவர்களின் பெரும் எதிர்பார்ப்பா இருந்துச்சாம்.. அவர் இருக்கும் வரை நம்மால் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ ஆக முடியாது என்பது அவர்களின் கண்ணுக்கு எட்டியவரை தெரிந்ததாம்..
இந்நிலையில் லண்டனுக்கு படிக்கப்போகும் வாய்ப்பு அவருக்கு வந்துச்சாம்.. படுதோல்வியால் நெருக்கடி இருந்தது மட்டுமல்லாமல் இவரை நம்பிய டெல்லி மேலிடம் ஒதுக்கி வச்சதை அவரால் ஜீரணிக்கவே முடியலையாம்.. இதனால் லண்டனுக்கு போனால் எல்லாம் சரியாகுமுன்னு நினைச்சிருக்காரு.. அதோடு அங்கிருந்தே கட்சியை வழி நடத்துவேன், ரெண்டு நாளுக்கு ஒரு அறிக்கை கொடுப்பேன்னு உறுதி அளித்திருந்தாராம்.. இதற்கான ஏற்பாடு செஞ்சி வச்சிக்கிட்டு விமானம் ஏறியிருக்காரு.. ஆனால் திடீரென ஒருங்கிணைப்பு குழுவை டெல்லி அறிவிச்சிட்டுதாம்.. இது கட்சியின்ரெண்டாங்கட்ட தலைவர்களுக்கே அதிர்ச்சியா இருந்துச்சாம்..
கொங்கு மண்டல இலைக்கட்சி மாஜிக்கள் ரெண்டுபேரு தொடர்ந்து மாஜி போலீஸ்காரரை தூக்குங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்களாம்.. மேலும் அந்த கட்சியோட தலைவர்களும் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்தாங்களாம்.. இதனை ரொம்பவே யோசிச்ச மேலிடம், ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்தியதா கட்சிக்காரங்க சொல்றாங்க.. இதனால் அவர் தலைவர் என்ற பெயரில் அறிக்கை விடமுடியாது.. மாஜி ஆகி விட்டாரு.. திரும்பி வந்து பதவி ஏத்துக்கிட்டாதான் மீண்டும் தலைவர் ஆக முடியுமென ஒரு தரப்பினரும், திரும்பி வந்தாலே ஒருங்கிணைப்பு குழு கலைந்து போகுமுன்னு இன்னொரு தரப்பினரும் சொல்றாங்க..
ஆனால் லண்டனில் இருந்து கட்சியை பார்ப்பேன்னு சொன்னதை மேலிடம் ரிஜக்ட் பண்ணியிருப்பதை பார்க்கும்போது அவரது பல்லை புடுங்கிவிட்டதாகவே அவரது எதிர்கோஷ்டியினர் சொல்றாங்க.. ஒருங்கிணைப்பு குழு தான் இனி எல்லாம் என்கிற நிலைமை அங்க வந்துருச்சி’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எல்லா பவரும் கையில் இருந்தும் மாநகராட்சி தலைமை பொறியாளரின் அறையில் என்னமோ நடக்குது… ரகசியமா இருக்குது…ன்னு சொல்றாங்களே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சியில் நடக்கும் பல்வேறு துறை வளர்ச்சி பணிகள், டெண்டர் விடப்பட்டு, மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் நடந்து வருகிறது. இதை மேற்பார்வையிடுவது, பில் தொகை பாஸ் செய்வதுனு முக்கிய பணிகளை தலைமை பொறியாளர் கவனித்து வருகிறாராம்.. இவர், நினைத்தால், ஒழுங்காக பணி செய்யாத ஒப்பந்ததாரரை தண்டிக்கலாம்.. அபராதம் விதிக்கலாமாம்.. கருப்பு பட்டியலில் சேர்க்கலாமாம்.. அந்த அளவுக்கு அதிகாரம் இருக்காம்…
ஆனால், இவ்வளவு அதிகாரம் கொண்ட இவரது அறையில், ஏற்கனவே கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டெழுத்து பெயர் கொண்ட ஒரு ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் தவம் கிடக்கிறாராம்.. இந்த இவரிடம் நெருக்கமாக இருந்த பல பொறியாளர்கள் மாற்றப்பட்டு விட்டாங்களாம்.. இன்னும் சிலர் தண்டிக்கப்பட்டு விட்டாங்களாம்.. ஆனாலும், இந்த ஒப்பந்ததாரரை அருகில் வைத்துக்கொண்டு, தலைமை பொறியாளர் வண்டியை ஓட்டுகிறாராம்.. இது, பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்காம்.. `என்னமோ நடக்குது…
ரகசியமாக இருக்குது…’னு சில நேர்மையான ஒப்பந்ததாரர்கள் புலம்புக்கிட்டு இருக்காங்களாம்… இந்த ஒப்பந்ததாரர் இலைக்கட்சி விஐபிக்களுக்கு ரொம்பவே நெருக்கமானவர் என்பது கூடுதல் விஷயம். ஆமை புகுந்த வீடு போல் இந்த ஒப்பந்ததாரர் புகுந்த ஆபீசும் `டர்….’ ஆகி விடுமாம். பாவம்… சி.இ… என்ன செய்ய போறாரோ…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரைக்கட்சி மாநில தலைவருக்கு எதிராக டெக்ஸ்டைல் மாவட்ட இலைக்கட்சி முக்கிய நிர்வாகிங்க கூட போர்க்கொடி தூக்காதது சேலத்துக்காரரை கடுப்பாக்கி இருக்கிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரருக்கும் தாமரை கட்சியின் தலைவருக்கும் இடையே வார்த்தை போர் உச்சகட்டதை எட்டியிருக்கு.. சேலத்துக்காரர் குறித்து தரக்குறைவாக பேசிய தாமரை கட்சி தலைவரை கண்டித்து பெரும்பாலான மாவட்டங்களில் இலை கட்சியினர் போராட்டம் நடத்தினாங்க.. சில இடங்களில் இலை கட்சியினர் உருவ பொம்மைகளையும் எரித்தாங்க.. ஆனால், டெக்ஸ்டைல் மாவட்டத்தில் இதுல ஒரு சலசலப்பும் இல்லையாம்..
தாமரை கட்சிக்கு எதிராக துளியளவு கூட ரியாக்ஷன் இல்லாமல், இலை கட்சி நிர்வாகிகள் இருக்காங்களாம்.. முக்கியமாக, இலை கட்சியின் மாஜி அமைச்சர் சைலண்டாகவே இருக்கிறாராம்.. தென்மாவட்டங்களில் கூட தாமரைக்கு எதிராக இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி போராட்டம் நடத்தியிருக்காங்க.. ஆனால், டெக்ஸ்டைல் மாவட்டத்தில் எதுவும் இல்லையேனு சேலத்துக்காரர் ரொம்பவே கோபத்தில் இருக்கிறாராம்…’’ என்று முடித்தார் விக்கியானந்தா.