சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு வரும் 13ம் தேதி நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 20.2.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப நிர்வாகி (இயந்திரவியல்), கடல் முதலாள் மற்றும் உதவி பொறியாளர் (இயந்திரவியல்) பதவிகளுக்கான நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 13ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்வர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் குறிப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் எழுத்து தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தெரிவு மேற்கொள்ளப்படும். எனவே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.