சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் அடங்கிய பதவிகளுக்கான முதல் தாள் தேர்வுக்கான கீ ஆன்சர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில்(நேர்முகத் தேர்வு) அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்த 12ம் தேதி மற்றும் 19ம் தேதி, 20, 21ம் தேதிகளில் கணினி வழித் தேர்வாக நடத்தப்பட்டது. இதில் கடந்த 12ம் தேதி முற்பகல் நடந்து முடிந்த தாள் 1- (தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள்) உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதாவது வருகிற 30ம் தேதிக்குள் தேர்வாணைய இணைய தளத்தில் உள்ள ஆன்சர் கீ சேலன்ஜ்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கடந்த 19, 20, 21ம் தேதிகளில் நடைபெற்ற இதர பாடங்களுக்கு (தாள் 2) உத்தேச விடைக்குறிப்புகள் விரைவில், அதாவது அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு 15 நாட்களுக்குள், தேர்வாணைய இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் என தேர்வர்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.