புதுடெல்லி: ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் (யுபிஎஸ்) மோடி அரசு யு டர்ன் அடித்துள்ளது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். விரைவில் அரியானா,காஷ்மீர் சட்ட பேரவைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்)ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து கூறிய ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குறைந்தபட்ச தகுதிச் சேவையான 25 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்திற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தளத்தில், ‘ஜூன் 4ம் தேதிக்கு பிறகு, பிரதமரின் அதிகார ஆணவத்தை விட மக்களின் அதிகாரம் மேலோங்கியுள்ளது. நீண்ட கால மூலதன ஆதாய வரியை பின்வாங்கியது,வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பியது. தகவல் ஒலிபரப்பு வரைவு மசோதா, ஒன்றிய அரசு பணிகளில் அதிகாரிகளை நேரடி நியமனம் செய்யும் முடிவை அரசு திரும்ப பெற்றது இதில் முக்கியமானது. தற்போது ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில்(யுபிஎஸ்) உள்ள யு என்பது ்மோடி அரசின் யு டர்ன்களை குறிக்கிறது. அரசின் பொறுப்பு கூறலை உறுதிப்படுத்தி 140 கோடி மக்களை சர்வாதிகார ஆட்சியிடம் இருந்து பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.