சென்னை: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (65). இவருக்கு கடந்த 2 மாதங்களாக புதிய எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து தொடர்பு கொண்ட நபருடன் ராமநாதன் பேசுகையில், அவருடைய இன்சூரன்ஸ் பாலிசி எண்களை சரியாக கூறி அதை சரண்டர் செய்தால் பணம் தருவதாக கூறியுள்ளனர்.
மேலும், வேறு சில இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனங்களை கூறி அதில் புதிய சலுகைகள் இருப்பதாகவும், அதனை பாலிசி எடுத்தால் குறைந்த நாட்களில் அதிக பணத்துடன் பாலிசியை சரண்டர் செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என ராமநாதனை நம்ப வைத்து அவரிடம் இருந்து பாலிசிகளுக்காக ரூ.18.65 லட்சம் வரையில் பண பரிமற்றம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது வரை அவருக்கு பாலிசி சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வரவில்லை என்றும், ஏற்கனவே வைத்திருந்த பாலிசியில் சரண்டர் செய்த பணமும் வரவில்லை என்றும், இது குறித்து இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சென்னையிலுள்ள கிளைகளில் விசாரித்த போது அவருடைய பெயரில் எந்த பாலிசியும் எடுக்கப்பட வில்லை என்றும் தெரிய வந்ததையடுத்து, ராமநாதன் மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராமநாதன் கொடுத்த புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் செல்போன் சிக்னல்கள் அழைப்பின் மூலம் குற்றவாளிகள் இருக்கும் இடத்தினை கண்டறிந்து மோசடியில் ஈடுபட்ட சென்னையே சேர்ந்த முனிர் உசேன் மற்றும் அசோகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 27 செல்போன்கள், லேப்டாப், கம்யூட்டர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.