சென்னை: கல்வி நிறுவன கட்டிடங்களை வரன்முறைப்படுத்த அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கி நகர் ஊரக இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் 2011க்கு முன் விதிகளை மீறி கட்டப்பட்டு இயங்குவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக இன்று முதல் அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி வரை 6 மாத காலத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிட பகுதியில் அமையும் பட்சத்தில் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.