புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் இதர சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு பாரபட்சமற்ற சூழலை உருவாக்குவதற்காக நிபுணர் குழுவை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அமைத்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது, இடஒதுக்கீட்டை முறையாக பூர்த்தி செய்வதை கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கடந்த 2012ல் வெளியிட்டது.
மாணவர் குறைதீர்ப்பு கமிட்டியில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி அல்லது பெண்கள் என இவர்களில் யாராவது ஒருவர் தலைவராகவோ, உறுப்பினராகவோ இடம் பெற வேண்டுமென உத்தரவிட்டது. ஆனாலும், உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காரணமாக எஸ்சி, எஸ்டி மாணவர்களின் தற்கொலைகள் உணர்வுமிக்க விஷயம் என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழங்களிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு பாரபட்சமற்ற சூழலை உருவாக்குவதற்கான தீர்வுகளை பரிந்துரைக்க நிபுணர் குழுவை யுஜிசி அமைத்துள்ளது.