சேலம்: தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தவணையை கேட்டு மிரட்டியதால் மன உளைச்சல் அடைந்த லாரி உரிமையாளர் வீடியோ பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து மகன் சேகர் (48). லாரி டிரைவரான இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சேகர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு கடன் வாங்கி லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்தார்.
கடனை திருப்பி செலுத்தி வந்த நிலையில், நிதி நிறுவனத்தினர் வட்டிக்கு மேல் வட்டி போட்டு சேகர் கொடுக்க வேண்டிய பணத்திற்காக அவரது லாரியை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சேகர் சங்ககிரியில் உள்ள வேறொரு தனியார் நிதி நிறுவனத்தில், கடன் வாங்கி டாரஸ் லாரியை வாங்கி ஓட்டி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை முறையாக செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதனிடையே, நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்தனர். சேகர் உடல்நிலை சரியில்லாததால் பணம் செலுத்த கால அவகாசம் கேட்டபோது, நிதி நிறுவன ஊழியர்கள் 8 ேபர் அவர் மீது போலீசில் புகார் கொடுப்போம் என மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சேகர், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்வதாகவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அவரது செல்போனில் இருந்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். மேலும், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, அவரது வீட்டின் அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த போலீசார், சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேகர் இறப்பதற்கு முன் பதிவிட்ட வீடியோ மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அவரை மிரட்டிய தனியார் நிதி நிறுவன அதிபர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.