சென்னை : ஆன்லைன் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு, அவரது மனைவி அஸ்மிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு குமார் என்பவர் வசித்து வருகிறார். பிரபல யூடியூபரான இவர், தற்போது தவெகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். கடந்த மாதம் விஷ்ணுகுமாரின் மனைவியான ஒப்பனை கலைஞரான அஸ்மிதா (33) விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவர் விஷ்ணு தன்னை தொடர்ந்து தாக்கி துன்புறுத்துவதாகவும் அதே நேரத்தில் தனது பெயரை பயன்படுத்தி ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஷ்ணு கைதாகி சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில், Forex ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் விஷ்ணு, அஸ்மிதா ஆகியோர், தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் தன்னிடம் மோசடி செய்ததாக சந்திரசேகரன் என்பவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தனித்தனியாக பழகி பணம் பெற்று மோசடியில் விஷ்ணுவின் குடும்பம் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து Forex ஆன்லைன் டிரேடிங் செய்வதாகக் கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்த இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு. அவரது மனைவி அஸ்மிதா, விஷ்ணுவின் தாய் ஆனந்தி மற்றும் தங்கை ஸ்ரீவித்யா ஆகிய 4 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தன் பெயரை பயன்படுத்தி வர்த்தக மோசடி செய்ததாக அஸ்மிதா கொடுத்திருந்த புகாரில் அவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.