கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைக்கூட்டத்தில் அஸ்வின் தனது நண்பர்களுடன் குளித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்மையில் பெய்த மழையால் பறளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், அங்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரையில் பறளியாறு ஓடுகிறது. பாறைகளின் கூட்டத்தின் மீது ஓடும் பறளியாறு தண்ணீர் அனைவரின் மனதை கொள்ளையடிக்கும் கட்சியாக அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல்வேறு திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.
மேலும் சமூக ஊடகங்களின் மூலமாக பறளியாற்றின் இயற்கை அழகை பதிவிட்டு வருவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது நண்பர்களுடன் அருள்வாய்மொழி வழியாக அருவிகாரைக்கு வந்துள்ளார். அங்கு பாறைகளின் கூட்டத்தின் இடையே பறந்தோடும் பறளியாற்றில் குளித்து மகிழ்ந்துள்ளார். மேலும் அவர் இதுதொடர்பான படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பறளியாறு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாகவும், பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பறளியாற்றில் குளித்து இதுதொடர்பான படங்களை சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால் அஸ்வினை போல பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.