Thursday, February 29, 2024
Home » இன்ஸ்டாகிராம், பேஸ்புக் விளம்பரங்களை பார்த்து வாங்கும் தரமில்லாத அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் விளம்பரங்களை பார்த்து வாங்கும் தரமில்லாத அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை

by Suresh

அம்பத்தூர்: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள விளம்பரங்களை பார்த்து வாங்கும் தரமில்லாத அழகு சாதன பொருட்களால், தற்போது பெண்கள் அதிகம் பாதிப்புக்குளாகின்றனர். இதனால் புற்றுநோய் வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என கூறுவார்கள். ஆனால் தற்போது அகத்தில் அழகு இருக்கிறதோ இல்லையோ, ஆனால் முகத்தில் அழகு குறையாமல் இருக்க பல்வேறு புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் பெண்கள். அந்த காலகட்டத்தில் மஞ்சளுக்கு நிகரான அழகுப் பொருள் எதுவும் இல்லை என்று கூறினர்.

மஞ்சள், கடலை மாவு, முல்தானி மெட்டி, செம்பருத்திப் பூ, ரோஜாப் பூ, ஆரஞ்சு பழத்தின் தோல், கத்தாழை உள்ளிட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தி தங்களது அழகை மெருகேற்றினர் பெண்கள். ஆனால் அது படிப்படியாக மாறி இயற்கையான பொருட்களை பயன்படுத்த சோம்பேறித்தனம் அடைந்து அதே பொருட்களை பொடியாக்கி அதனுடன் சில வேதிப்பொருட்களை கலந்து பவுடர்களாக கூடுதல் விலைக்கு விற்கத் தொடங்கினார்கள். அதனை அப்படியே வாங்கி பெண்கள் பயன்படுத்த தொடங்கினர். இதனால் இயற்கையான பொருட்களில் இருந்து கிடைக்கும் பலன்கள் குறைய தொடங்கின. அதன் பிறகு, ஒருபடி மேலே சென்று அதே பவுடர்களை பல்வேறு கெமிக்கலுடன் கலந்து லோசனில் கிரீமாக பல கம்பெனிகள் விற்பனை செய்தன. அதனை மிகவும் ஆர்வமாக வாங்கி அப்படியே பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் வெளியே செல்லும்போது மட்டும் முகம் பளபளப்பாக பெண்கள். வீட்டிற்கு வந்து சோப்பு போட்டு முகத்தை கழுவியதும் தங்களது இயல்பான முகப்பொலிவை இழந்துவிடுவர். இதன் விளைவாக சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு வயதானவர்கள் போல காட்சியளிக்கின்றனர். சினிமாவில் காட்டும் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்த்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. அது போல இந்த காலத்து பெண்கள் படிப்படியாக பல்வேறு தரம் இல்லாத அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தங்களுக்கு தாங்களே வினையைத் தேடிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் ஆன்லைன் வர்த்தகம் வந்த பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் பல்வேறு சலுகை அளிக்கப்படுகிறது. எந்த கம்பெனியின் பொருள் என்பதை விட, அதில் எந்த அளவிற்கு விலை குறைப்பு மற்றும் ஆபர் உள்ளது என்பதைத்தான் மக்கள் அதிகம் பார்க்கின்றனர். இதனால் தரம் இல்லாத பல பொருட்கள் சந்தையில் விற்று தீர்ந்து விடுகின்றன. ஆனால் அதனைப் பயன்படுத்தவர்கள் கண்டிப்பாக பாதிப்புக்குள்ளாகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைனில் அழகு சாதன பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் அழகு சாதனப் பொருட்கள் குறித்த விளம்பரங்கள் அதிகமான வெளியாகின்றன. மக்களும் அதனை நம்பி பொருட்களை வாங்குகின்றனர்.

அப்படி வாங்கும் பொருட்களால் அவர்களது பிரச்னை கண்டிப்பாக தீராது. ஒரு லட்சம் பேர் ஒரு விளம்பரத்தை பார்த்தால் குறைந்தது 100 பேராவது அந்த பொருளை வாங்கி பயன்படுத்துவார்கள். இதுதான் விளம்பரதாரர்களின் யுத்தி. இதனை சற்றும் எதிர்பாராத பெண்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அழகு சாதனப் பொருளை பயன்படுத்திவிட்டு, அது சரி இல்லை என வேறு ஒரு நிறுவனத்தின் பொருளை பயன்படுத்துவார்கள். இவ்வாறு மாறி மாறி பயன்படுத்துவதால் சருமம் பாதிக்கப்பட்டு இறுதியில் அவர்கள் தோல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் அளவிற்கு தள்ளப்படுவார்கள். தற்போது இதுபோன்ற பல பிரச்னைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேசியல் கிரீம்கள், ஹெர்பல் பொருட்கள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் கெமிக்கல் கலந்துள்ளதால் பிரச்னை ஏற்படும் என சமீபத்திய ஆய்வுகள் நமக்கு நினைவூட்டி வருகின்றன. பெண்கள் அதிகம் பயன்படுத்தும் அழகு சாதன பொருளாக லிப்ஸ்டிக் உள்ளது. இதில் ஈரப் பதத்திற்கு ஒன்று, நிறத்திற்காக ஒன்று என இரண்டு விதமான லிப்ஸ்டிக்குகளை பெண்கள் பயன்படுத்துகின்றனர். இதில் கிட்டத்தட்ட 8 விதமான வேதிப் பொருட்கள் கலந்துள்ளன என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் நிக்கல் என்ற உலோகம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளது எனவும், இது அலர்ஜி மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. 50 சதவீத லிப்ஸ்டிக்குகளில் குரோமியம் அதிகம் இருப்பது ஒரு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று பெண்கள் தங்களது தோள்களில் பூசிக்கொள்ளும் கிரீம் வகைகளிலும் 60% அளவிற்கு கெமிக்கல் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு அழகு சாதன பொருளிலும் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு உள்ளது. சில வேதிப் பொருட்கள் நம் உடலுக்குள் நுழைவதை நாம் தவிர்க்க முடியாது. அதனால் தான் அனுமதிக்கப்பட்ட அளவு என்ற ஒரு வரையறையை வைத்துள்ளார்கள். இதனை உறுதிப்படுத்த ஒவ்வொரு பொருளையும் பெண்கள் பரிசோதனை செய்ய மாட்டார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் வேதிப்பொருட்களின் அளவை கூட்டி விற்பனை செய்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல அழகு சாதன பொருட்களில் பாதரசம் கலந்துள்ளது. இது தோலை நிறமாற்றம் செய்துவிடும். மேலும் தழும்புகளை ஏற்படுத்தும். இதனால் பாதரசம் பயன்படுத்தப்பட்ட அழகு சாதன பொருட்களை பலரும் தடை செய்துள்ளனர். நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கையான அரிய மூலிகைகளையும், நல்ல பழ வகைகளையும் விட்டுவிட்டு உடலுக்கு ஒவ்வாத
அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் அழகு கூடுகிறதோ இல்லையோ ஆபத்து நிச்சயம் என்பதை பெண்கள் உணரும் வரை, தரம் இல்லாத அழகு சாதன பொருட்கள் சந்தையில் வலம் வரும் என்பதே நிதர்சனமான உண்மை.

அழகு சாதன பொருட்கள் பயன்பாடு குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் தோல் நோய் மற்றும் அழகியல் துறை தலைமை மருத்துவர் ஆனந்தன் கூறுகையில், ‘‘அழகு சாதனப் பொருட்களை பொறுத்தவரை அதை பயன்படுத்துபவர்களின் தோலுக்கு ஆகுமா என்பதை பார்க்க வேண்டும். சிலருக்கு மிகவும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் கூட அலர்ஜி ஏற்படும். அதே நேரத்தில் நூறு ரூபாய் கொடுத்து ஒரு கிரீமை வாங்கி போடுவார்கள். ஆனால் அதில் அலர்ஜி வராது. எனவே எந்த பொருள் எந்த தோலுக்கு ஒத்துக் கொள்கிறது என்பதை பார்க்க வேண்டும். தலைமுடிக்கு அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும்போது ஒன்று தலைமுடி கொட்டிவிடும், இல்லையென்றால் முடி வெள்ளையாக மாறிவிடும். இதேபோன்று ஒவ்வொரு பொருட்களை பயன்படுத்தும்போதும் ஒவ்வொரு விதமான மாறுதல்கள் ஏற்படும்.

முகம் வெள்ளையாக மாற கிரீமை பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் முகத்தில் போடும் கிரீமில் ஸ்டிராய்டு கலந்திருக்கும். இதனால் முதலில் முகம் வெள்ளையாக இருப்பது போல தெரியும். ஆனால் அதன்பிறகு முகம் கருப்பாக மாறிவிடும். பின்னர் அவர்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டி இருக்கும். சிலர் மலிவான விலையில் உள்ள லிப்ஸ்டிக் வகைகளை பயன்படுத்துவார்கள். இதை பயன்படுத்துவதால் உதட்டில் வெடிப்பு, கொப்பளம் ஏற்பட்டும். இது போன்ற பல பிரச்னைகள் வருகின்றன. உடம்பில் ஆறு விதமான ஸ்கின் உள்ளது. ஒவ்வொரு தோலுக்கும் என்ன தன்மை உள்ளது என்பதை பார்த்து அதற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் ஆபத்துக்கள் நிச்சயம்,’’ என்றார்.

You may also like

Leave a Comment

15 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi