சென்னை: புழல், விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான 11ம் வகுப்பு மாணவி, தனது வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அதிகளவு பதிவு செய்து வந்தார். இதற்கு லைக் கொடுத்து, பாராட்டி வந்த சென்னையை சேர்ந்த 24 வயதான ஜவுளிக்கடை ஊழியருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னாளில் இது காதலானது. இந்த நிலையில் மாணவியும், அந்த வாலிபரும் ரயில் மூலம் நேற்று கோவைக்கு வந்தனர். மாணவியின் தோழி ஒருவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பதாக தெரிகிறது. அவர் வீட்டிற்கு சென்று தங்கியிருக்கலாம் என மாணவி காதலருடன் வந்திருந்ததாக கூறப்படுகிறது. மாணவிபுடன் திருச்சியை சேர்ந்த இன்னொரு தோழியும் வந்திருந்தார். இவர்கள் 2 பேரும் பள்ளியில் படித்து வருகின்றனர்.
கோவை ரயில் நிலையத்தில் 4வது பிளாட்பாரத்தில் மாணவிகளும், அந்த வாலிபரும் சந்தேகப்படும்படி நின்றதை பார்த்த ரயில்வே போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது காதல் மோகத்தில் வாலிபருடன் சென்னை மாணவி, கோவைக்கு வந்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே சென்னையில் மாணவியின் பெற்றோர், தங்கள் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்திருந்தனர். போலீசார் தேடி வந்த நிலையில் கோவையில் மாணவி மீட்கப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். வாலிபர் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இன்ஸ்டாகிராம் மோகத்தில் வாலிபருடன் சென்னை மாணவி கோவைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.